Kallappetti Singaram

கல்லாப்பெட்டி சிங்காரம்- நகைச்சுவை நடிகர்
எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, டார்லிங் டார்லிங் டார்லிங் , சுவரில்லாத சித்திரங்கள்,மோட்டார் சுந்தரம்பிள்ளை, இன்று போய் நாளை, ஒரு கை ஓசை,  கதாநாயகன் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.இவர் சொந்தமாக நாடக்குழு வைத்து நாடகங்கள் பலவும் மேடையேற்றியுள்ளார். மேலும் விவரங்களுக்குத் தொடர்ந்து படியுங்கள்…..
கறுத்து மெலிந்த தேகம், திகிலடைந்த ஆனால் சுயதைரியம் அளித்துக் கொள்வதன்மூலம் திடீர் பிரகாசமடையும் கண்கள், திறந்த வாய், தோரணையான நடை  என்ற அடையாளங்களுடன் நகைச்சுவை கலந்த குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம் வந்தவர் கல்லாப்பெட்டி சிங்காரம். காணாமல் போன குட்டியை தேடும் ஆடு  தமிழில் பேசி அழைத்தால்  வரும் குரல் அவருடையது. எண்பதுகளில் அவர் பங்கேற்ற படங்களில் நகைச்சுவை ஏரியாவை கலகலக்க செய்தவர்.

தமிழ் வணிக சினிமாவின் வெற்றிகரமான திரைக்கதையாளரான பாக்யராஜ் முதன் முதலில் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகம் செய்தார். அந்தப் படத்தின் டைட்டிலில் இதை சொன்னாலும் கிட்டத்தட்ட நாற்பது வயதைத் தாண்டி அவர் சினிமாவில் வந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. அறுபதுகளிலேயே  மோட்டார் சுந்தரம்பிள்ளை போன்ற படங்களில் சிறு வேடங்களில் சிங்காரம் வந்திருந்தாலும் முக்கியத்துவம் பெற்ற வேடம் என்ற வகையில் இது தான் முதல் படம் என்பதால், ஒருவேளை அறிமுகம் என்று பாக்யராஜ் குறிப்பிட்டிருப்பார் போலும்.  சில இயக்குனர்களுக்கு என்று கம்பெனி ஆர்டிஸ்ட் மாதிரி சில நடிகர்கள் உண்டு.பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சின்ன சின்ன வேடங்கள் அவர்களுக்குத் தொடர்ந்து தருவார்கள்.  மகேந்திரனுக்கு சாமிக்கண்ணு, குமரிமுத்து, வெண்ணிறாடை மூர்த்தி. பாரதிராஜாவின் பல படங்களில் அவரது உதவியாளர்கள் எங்காவது தலைகாட்டிக் கொண்டே இருப்பார்கள். பாலுமஹேந்திரா படங்களில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் அடிக்கடி வருவார். அது போல் பாக்யராஜ், சிறு வேடம் என்றாலும் கதையுடன் ஒட்டிய பாத்திரங்களை கல்லாப்பெட்டிக்கு தன் பல  படங்களில் தந்தார். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே இயக்குனர் பாக்யராஜ் தான் என்று சொல்லவேண்டும். அவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் கல்லாப்பெட்டி  ஏற்று நடித்தப் பாத்திரங்கள் தனித்த நகைச்சுவைக்காக இன்றும் பேசப்படுகின்றன.

சோகமயமான க்ளைமாக்ஸ் கொண்ட சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையால் நிரம்பியிருக்கும். கல்லாப்பெட்டி சிங்காரம், காந்திமதி இவர்களுடன் கவுண்டமணியும் நடித்திருந்த அந்தப் படத்தில் சிறு நகரம் ஒன்றில் வாழும் மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளில் தெறிக்கும் நகைச்சுவைத் தருணங்களை மிக இயல்பாகக் காட்டியிருப்பார் பாக்யராஜ். அமெச்சூர் நாடகம் போடும் கதாநாயகனின் அப்பாவாக காக்கி டவுசரும் கைவைத்த பனியனும் அணிந்து படம் முழுக்க வருவார் கல்லாப்பெட்டி . வெளியிடங்களில் சரளமாகப் பேசி சிரித்தாலும் மனைவியைப் பார்த்ததும் சப்த நாடியும் அடங்கி நிற்கும் பாத்திரம் அவருக்கு. கவுண்டமணியின் கடையில் உட்கார்ந்து “கண்ணடிச்சா வராத பொம்பளை..கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் காந்திமதி வந்து நிற்க வெலவெலத்துப் போய் அவரைப் பார்க்கும் காட்சியில் தியேட்டர் சற்று இடைவெளி விட்டு சிரித்து மாயந்திருக்கும். படத்தில் பாக்யராஜ் நடத்தும் நாடக ஒத்திகையின் போது நடிகையின் அம்மாவை சைட் அடித்து பாக்யராஜை வெறுப்பேற்றுவார். அந்த அம்மாவுக்கு கலர் வாங்கிக் கொடுப்பார். அந்தப் படத்தில் மறக்க முடியாத பல நகைசுவு காட்சிகள் உண்டு. கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம் இருவரும்  வெவ்வேறு வகைகளில் பாக்யராஜை வெறுப்பேற்றுவார்கள். சரியாக நடிக்க வராத ஒருவனை ‘தகுதி நீக்கம்’ செய்து விட்டு தானே அந்த பாத்திரத்தை பாக்யராஜ் நடித்துக்காட்டும்போது கவுண்டமணி அந்த நடிகரிடம் சொல்வார், ” அவென் நடிப்புக்கு ஒன்நடிப்பு எவ்வளவோ தேவலை!” போதாதக் குறைக்கு சொந்தத் தந்தை இப்படி நடிகையின் அம்மாவிடம் வழிவதைக் கண்டு நொந்து விடுவார் பாக்யராஜ். அந்தக் காட்சியில் மகனின் கண்டிப்புக்கு பயந்தாலும் தன் காதல் உணர்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத பாத்திரத்தின் பாவனைகளை அருமையாகச் செய்திருப்பார் கல்லாப்பெட்டி சிங்காரம்.

எண்பதுகளில் குறிப்பிட்ட சில இயக்குனர்களால் கீழ் மத்தியத் தர மக்களின் வாழ்க்கை திரையுலகில் அசலாய் கொண்டு வரப்பட்டபோது எதார்த்தமான முகம் கொண்ட புதிய நடிகர்களின் வருகை முக்கியத்துவம் பெற்றது. அன்றாடம் எதிர்ப்படும் முகங்கள் அறிமகமான சமயத்தில் திரையில் தோன்றிய கல்லாப்பெட்டி மிக அருமையாக அந்த மக்களின்  வாழ்க்கையை திரையில் பிரதிபலித்தார். எளிய மக்களின் மொழியை திரைக்கு ஏற்றவாறு சற்று மெருகேற்றிப் பேசி நடித்த நடிகர்களில் அவரும் ஒருவர். முதல் படத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் பாத்திரத்தில் நடித்த அவருக்கு பின்னாளில் தோரணையான குஸ்தி வாத்தியார் வேடம் கொடுத்தார் பாக்யராஜ் . மனிதர் அதிலும் வெளுத்து வாங்கினார்.

தமிழில் வந்த நகைச்சுவைப் படங்களில் மிக முக்கியமானப் படமான ‘இன்று போய் நாளை வா’ வில் அவர் செய்த பாத்திரம் இன்று வரை யாராலும் பிரதி கூட எடுக்க முடியாதது. உடற்பயிற்சி ஆசிரியர்களின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டு அதை இயல்பாக அதே சமயம் நகைச்சுவை கலந்து நடித்து அந்தப் பாத்திரத்தை மெருகேற்றினார். படத்தில் ராதிகாவை காதலிக்கும் வெங்கிட்டு, அதற்காக ராதிகாவின் தாத்தா கல்லாப்பெட்டியைக் கவர முடிவு செய்து அவரைப் பற்றி அந்த ஏரியாவின் துணி வெளுக்கும் தொழிலாளியிடம் விசாரிக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. அந்தத் தொழிலாளி சொல்வார் “காலையிலயும் சாயங்காலமும் இந்தாளு லொங்கு லொங்குன்னு ஓடுறாரு..எங்கே ஓடுறாரு..எதுக்கு ஓடுறாரு ன்னே புரியல”. திருச்சி நகரத்தில் இருந்து உடுமலைப்பேட்டை போன்ற டவுனுக்குள் குடிவந்த பயில்வான் ஜாகிங் செய்யும் விஷயம் அந்தூர் தொழிலாளிக்கு எப்படித் தெரியும்? அப்பாவித்தனமான அதே சமயம் குறும்பான அந்த விவரிப்பு வார்த்தைகளாக செல்லும்போதே  கல்லாப்பெட்டி ‘எங்கோ’ ஓடிக்கொண்டிருக்கும் காட்சி விரியும். இயக்குனரின் புத்திசாலிதனமான காட்சியமைப்பு என்றாலும் அதற்கு முன் கல்லாப்பெட்டி சிங்காரம்  ஒரு கண்டிப்பான ஆனால் நகைப்பு தரக்கூடிய பாத்திரம் என்று பார்வையாளர்களுக்கு  முன்கூட்டியே பதிவாகி இருப்பதால் அந்தக் காட்சி இன்றும் வெடிச் சிரிப்பைப் பார்வையாளர்களிடம் தோற்றுவிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

அவரை அடிக்க அடியாட்கள் ஏற்பாடு செய்து ‘காப்பாற்ற’ வெங்கிட்டு காத்திருக்க, கல்லாப்பெட்டி அந்த உள்ளூர் ரவுடிகளை பந்தாடும் காட்சியில் அவரே சண்டையிட்டு நடித்திருப்பார் போலும் . பாய்ந்து பாய்ந்து அவர் தரும் உதை தாளாமல் ரவுடிகள் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு தலைதெறிக்க ஓடும் காட்சி அபாரமான ஒன்று. தன்னை சந்திக்க வந்து விட்டு தன் பேத்தி ராதிகாவிடம் விடைபெறும் வெங்கிட்டுவிடம்  ‘ ஏன் எனக்கு பை சொல்லலை?’ என்று அதட்டுவார். ‘சாரி ஸார்..பை ஸார்’ என்று பம்மி விடைபெறும் அவனிடம் ‘ஓக்கே பை..ஓக்கே பை’ என்பார் பிரகாச முகத்துடன். தன்னை மதித்து விடைபெற்ற  குதூகலத்தில்  நாற்காலியில் அமர்ந்து கொண்டே கைகளை முழங்கால்களில் பெருமையுடன்  வைத்து கண்களை மகிழ்ச்சியுடன் உருட்டுவார். காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வானான  தனக்கு உரிய மரியாதையை மிரட்டியாவது வாங்கி விடும் பாத்திரம் அது. அதற்கு அத்தனை நியாயம் செய்யும் நடிப்பு கல்லாப்பெட்டியுடையது.

தன்னிடம் குஸ்தி கற்க வைத்தவனை தலைகீழாக நிற்கவைத்து வயிற்றில் குத்தி அவனைப் படாத பாடு படுத்தும்போது முகத்தில் இருக்கும் கண்டிப்பு. அத்தனை தோரணையுடன் அதிகாரம் செய்யும் அவர் தன்னிடம் ‘பாடம்’ கற்ற மாணவனிடமே அடிவாங்கிப் பிச்சைக்காரனைப் போல் வரும் காட்சியில் அவரது உடல்மொழி அனாயாசமாக இருக்கும்.  ‘நீ நாசமாகப் போக’ என்று யாரிடமும் எரிந்து விழுந்தாலும் எதிராளி வாய் விட்டு சிரித்துவிடும் வகையிலான நகைப்பூட்டும் குரல் அவருக்கு. எனவே அந்தக் காட்சி நகைச்சுவையின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும். ராதிகாவை காதலித்து ஏமாந்த மற்றொரு வாலிபன் ராஜேந்திரனிடம் (புகழ் பெற்ற ‘ஏக் காவ் மேய்ன் ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸான்’ வசனம் நினைவிருக்கும்!) அடிபட்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் ஹிந்தி பண்டிட் மருமகனைப் பார்த்து ‘ இவன் அந்தப் பயல அந்தத் தூண்ல வச்சி ச்சொத்து ச்சொத்து னு மோதும்போதே நெனச்சேன்..இப்படி ஏதாவது நடக்கும்ன்னு’ என்று சொல்வார். வார்த்தைகளை கடித்து அவர் உச்சரிக்கும் விதம் சிறப்பாக இருக்கும். பிற நடிகர்களிடம் இருந்து நகைச்சுவை நடிகர்கள் பார்வையாளனை நெருங்கி வரக் காரணம், எழுதப்பட்ட வசனங்களை அப்படியே ஒப்பிக்காமல், சாதாரண மக்களின் மொழியிலேயே பேசி நடிப்பதால் தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்துப் படங்களில்  நாயகர்கள் “கடவுளே..இவ்வாறு நடந்து விட்டதே… இனி என் எதிர்காலம் என்ன ஆகுமோ?” என்று தூய தமிழில் துக்கப்படும்போது  நகைச்சுவை நடிகர்கள் “அட இதுக்கெல்லாம் கவலைப்படாதய்யா..எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாப்போவும்” என்று எளிய வார்த்தைகளில் ஆறுதல் தருவார்கள். முக்கியத்துவம் பெற்ற நடிகர் இல்லையென்றாலும் கல்லாப்பெட்டி சிங்காரம் இன்றும் நினைவுகொள்ளப்பட அவரது வசன உச்சரிப்பும் முகபாவனையும் பிரத்யேகக் குரலுமே காரணம்.

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் இன்னும் உச்சமாக என்னியோ மோரிக்கொன் இசையமைத்த    த குட் த பேட் த அக்லி தீம் இசை பின்னணியில் ஒலிக்க குளியல் தொட்டியில் இருந்து கம்பீரமாக எழுந்து சென்று கோட் சூட் அணியும் காட்சியில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த புதுப் பணக்காரர் போலவே இருப்பார். அடுத்த காட்சியில் அவர் வெறும் வாட்ச்மேன் தான் என்று பார்வையாளர்களுக்குப் போட்டு உடைத்து விடுவார் மகன் பாக்யராஜ். ” அப்பா..மொதலாளி கோட்டை போட்டு சேரில் உக்காந்தாலும் நீ வாட்ச்மேன் தான்” என்று சொல்லும்போது குட்டுடைந்த கல்லாப்பெட்டியின் முகபாவனை சிறப்பாக இருக்கும். உண்மை தான் என்றாலும் ‘அதுக்கென்ன’ என்பது போலும் ஒரு பார்வைப் பார்ப்பார் முழித்துக் கொண்டே. அந்தப் படத்தில் மகன் முதலாளியின் மகளைக்  காதலிக்க வேண்டுமே என்று எதிர்பார்க்கும் அல்ப அப்பா பாத்திரத்தை தன் நடிப்பால் மிளிரச் செய்தார். மகனுக்கும் முதலாளி மகளுக்கும் திருமணம் நடக்கும் என்ற பெரு நம்பிக்கையில் சேட்டிடம் கடன் வாங்கி விடுவர் கல்லாப்பெட்டி. ஏற்கனவே கடன்வாங்கி சேட்டிடம் ‘கைதியாக’ இருக்கும் வாய் பேச முடியாதவரைப் பார்த்து கல்லாப்பெட்டி கேட்பார் ” என்ன தைரியத்துலே நீ எல்லாம் கடன் வாங்கணும்? ஒண்ணு கடன் திரும்பக் குடுக்க வக்கிருக்கணும்..இல்லேன்னா அதுக்கான அதிர்ஷ்டமாவது இருக்கணும்  ” என்பார் எகத்தாளமாக . சேட்டிடம் சிக்கிய கைதி இவரைப் பார்த்து ஒரு கெக்கலிப்பு சிரிப்பார். “அடுத்து நீதான்” என்ற பொருள்படும்படியாக.

ஒரு காட்சியில் பூர்ணிமா அறையில் எதையோ தேடும் பாக்யராஜை அவர் பூர்ணிமாவுடன் சரசத்தில் இருப்பதாக நினைத்து எல்லையில்லா  சந்தோஷமும் பொய்க்கோபமும் கொப்பளிக்க அவர்கள் இருவரையும் கண்டிக்கும் காட்சி அவரது நடிப்புத் திறனுக்கு ஒரு சான்று. ஒருபுறம் முதலாளியின் மகள் தன் மகனுக்குத் தான் என்ற குதூகலம்,  அதே சமயம் தான் பொறுப்பான தகப்பன் என்பதைக் காட்ட வேண்டிய ஆர்வம் இரண்டும் கலக்க துள்ளலுடன் முன்னும் பின்னும் நடந்து திட்டிக்கொண்டே இருப்பார். பெரும்பாலான படங்களில் மகனின் செயல்கள்  மீது எரிச்சல் கொண்ட தகப்பனாகவே தோன்றினார் கல்லாப்பெட்டி. உதயகீதத்தில் கவுண்டமணியின் தந்தையாக வந்து அவரைக் கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பார். அப்படி திட்டிய பின்னர்,  உத்திரத்தில் இருந்து  தொங்கும் கால்களையும் சிந்திக் கிடக்கும் சிவப்பு பெயின்டையும் வைத்து கவுண்டமணி தன் கண்டிப்பால் தற்கொலை செய்துகொண்டு விட்டாரோ என்று அதிர்ச்சியடைவார். கவுண்டமணியின் ஜெயில் சிநேகிதத்தை வைத்து செந்தில் கல்லாப்பெட்டி வீட்டில் கன்னம் வைத்து பொருட்களைக் களவாடி சென்ற  பின்னர், கட்டிய துண்டுடன்  சிறையில் இருக்கும் மகனை சந்திக்க வருவார் “நல்லவேளை துண்ட விட்டுட்டுப் போய்ட்டான்..இல்லேன்னா என் கதி என்ன?” என்பார். பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்த அந்த ஏழு நாட்களிலும் தன் தனிச் சிறப்பை அவர் பதிவு செய்தார். வீடு பார்க்க பாக்யராஜிடம் அவரது உயர்த்திய வேட்டியை கீழே சொல்லும் காட்சி இயல்பான நகைச்சுவைக்கு ஒரு சான்று. “பொண்ணை மட்டுமில்லாமல் பொண்ணோட அம்மாவையும் சேத்துத் தள்ளிக்கிட்டுப் போய்விடுவானுங்கள்” என்ற பயத்தில்  பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் வீடு சொந்தக் காரர் வேடம். சிறிய வேடங்கள் என்றாலும் தனக்குரிய பாணியில் முத்திரை பதிக்க கல்லாபெட்டி தயங்கியதே இல்லை. காக்கிசட்டையில் கமலுக்கு அப்பாவாக நடித்திருந்தார். கவுண்டமணி கதாநாயனாக நடித்த ஒரு படத்தில் அவருக்குத் தந்தையாக வருவார். தன் மகனைப் புறக்கணிக்கும் பணக்காரத் தந்தையாக எதிர்மறையான வேடத்தில் நடித்தார்.

ஒரு படத்தில் காது கேளாத பாத்திரத்தில் கல்லாப்பெட்டியும் கரிக்கோல் ராஜும் வருவார்கள். சுற்றி பூகம்பமே வந்தாலும்  காதுகளுக்கு சத்தம் எட்டாமல் தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொண்டே இருப்பார்கள். எங்க ஊருப் பாட்டுக்காரன் படத்தில் அதிர்ஷ்டமற்ற செந்தில் எங்கு வேலைக்கு சென்றாலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும். அந்தப் படத்தில் பண்ணையார் வேடத்தில் வரும் கல்லாப்பெட்டி சிங்காரத்திடம் வேலைக்கு சேர்வார் செந்தில். சேர்ந்த முதல் நாளே வாயில் மாங்காயைக் கடித்தபடியே இறந்து விடுவார் கல்லாப்பெட்டி சிங்காரம். அவர் மனைவி செந்திலை ஆத்திரத்தில் அடிபின்னிவிடுவார். பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் இருவரும் நடித்த, மலையாள ரீமேக் படமான் கதாநாயகன் என்ற படத்தில் அவர்களின் வீட்டு உரிமையாளராக  வருவார். கோனார் வேடத்தில் நடித்த கல்லாப்பெட்டியிடம் சேகர் கேட்பார் ” நீங்க தானே கோனார் நோட்ஸ் எழுதுனீங்க?”. ஏற்கனவே வாடகை தராமல் இழுத்தடிக்கும் அவர்களின் கிண்டலை கேட்டு கடுப்பாகி திட்டுவார் கல்லாப்பெட்டி. இது போன்ற சிறு பாத்திரங்களில் பல படங்களில் நடித்தார்.  என்றாலும் அவரது பிரத்யேகக் குரல் அந்த சிறு பாத்திரங்களையும் மிளிரச் செய்தது.

 இன்றும் டீக்கடைகளில் நேற்றைய மனிதர்கள் தங்கள் வயதையொத்த மற்றவர்களுடன் எஞ்சிய தங்கள் வாழ்க்கையின் நினைவுகளை தேநீருடன் பகிர்ந்துகொண்டிருக்கும்போது கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். சுற்றியிருப்பவர்கள் வெடித்து சிரிக்கும்படி பேசி விட்டு சிரிக்கும் நண்பர்களைப் பெருமிதத்துடன் பார்த்து ரசிக்கும்  ஏதேனும் பெரியவரிடம்  கல்லாபெட்டியின் சாயலைக் காணலாம்.

பூவிலங்கு (1984) படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம்

ImageImageImage
Kallappetti Singaram-Nagesh-Motor Sundaram Pillai 1966- Kallappetti Singaram-Nagesh-Motor Sundaram Pillai 1966-1 Kallappetti Singaram-Nagesh-Motor Sundaram Pillai 1966-2
CR Parthipan-Kallappetti Singaram-Motor Sundaram Pillai 1966-CR Parthipan-Kallappetti Singaram-Nagesh-Motor Sundaram Pillai 1966-
’அத்தை மகள்’ [1966] படத்தில் நாகேஷுடன் கல்லாப்பெட்டி சிங்காரம்
Kallappetti Singaram-Athay Magal 1965- Kallappetti Singaram-Nagesh-Athay Magal 1965- Kallappetti Singaram-Nagesh-Athay Magal 1965-1
-காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை
‘ஓசை’ [1984] படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம் தனித்தும் மோகனுடனும்
 Kallappetti Singaram-Osai 1984- Kallappetti Singaram-Osai 1984-1 Kallappetti Singaram-Mohan-Osai 1984-1Kallappetti Singaram-Mohan-Osai 1984-
Duck Sreenivasan-MRK-Kallappetti-Rajesh-Makkal Enn Pakkam 1987-
Kallapetti Singaram-Simma Swappanam 1981-
Kallappetti Singaram-Ammukkutty-Kumara Vijayam 1976-
Kallappetti Singaram-Thengai-Sukumari-Kumara Vijayam 1976-
Kallappetti Singaram-Suruli Rajan-G.Dhanapal-Eduppar Kai Pillai 1975-Kallappetti Singaram-Suruli Rajan-R.Dhanapal-Manorama-Eduppar Kai Pillai 1975-
Kallappetti-MRR.Vasu-Manorama-Marupiravi 1973-Kallappetti-MRR.Vasu-Manorama-Marupiravi 1973-1
Kallappetti-KK.Sounder-Oru Kai Osai 1980-
Meenakshi Patti-Kallappetti-Oru Kai Osai 1980-

12 comments on “Kallappetti Singaram

    • தகவலுக்கு மிக்க நன்றி சிவசுப்பிரமணியம் அவர்களே.கன்னியாகுமரியில் 1987-களில் என்று நினைக்கிறேன்; எம்.ஜி.ஆர் உடல் நலமின்றி இருந்தபோது ஜேப்பியார் 10 நாட்கள் யாகம் ஒன்றை நடாத்தினார். அப்போது தினமும் நாடகம் நடத்தப்பட்டது. இலங்கேஸ்வரன் ஆர்.எஸ்.மனோகரின் நாடகம், மனோரமாவின் நாடகம், கல்லாபெட்டியின் நாடகம் என பல நாடகங்கள் நடந்தது.அப்போது நானும் பார்த்திருக்கிறேன்.

  1. அவர் நடித்த பொழுது நான் பிறக்கவில்லை. ஆனால் இவர் நடித்த படங்களை எப்பொழுது போட்டாலும் அவர் scene முடிஞ்ச பிறகு தான் எழுந்து செல்வேன், அப்படி ஒரு அற்புதமான நடிப்பு… அவர் நடித்த இன்று போய் நாளை வா படத்தை ரீமேக் என்ற பெயரில் கொலை செய்த பாதகர்களை நினைத்தால் கோபம் வருகிறது.

    நிறைய நாட்களாக இவர் இப்பொழுது என்ன செய்கிறார் என்று தோன்றும். அவர் உயிருடன் இல்லை என்று உங்கள் தளத்தில் தான் தெரிய வந்தது. என் தந்தைக்கு பிடித்த நடிகர். இறைவன் இன்னொரு பிறவி அவருக்கு கொடுத்தால் அதில் அவர் உலக மகா நடிகன் பட்டம் பெற்று பெரும் புகழோடு வாழ வேண்டும்… மனதார பிரார்த்திக்கிறேன்.

    இன்னொரு நடிகை பற்றி நீங்கள் தவறாமல் பதிவிடுங்கள். அந்த அம்மா பெயர் தெரியவில்லை. டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் பாக்யராஜ் அவர்களின் தங்கையாக வருவார் எத்தனை படங்கள் நடித்தார் என்றும் தெரியவில்லை. நல்ல நடிகை நல்ல குடும்பப்பாங்கான முகம். அவரை பற்றி தகவல் கிடைத்தால் உங்கள் தளத்திலும் விக்கிப்பீடியாவிலும் பதிவேற்றுங்கள். இவர்கள் போன்றோரைத் திரையுலகம் கவுரவிக்க வேண்டும்.

    • உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நாதன். இவ்வலைப்பூவிற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். அருமையான தமிழில் உங்கள் கருத்துக்களைப் பதிவிட்டதற்கும் பாராட்டுக்கள். பத்தி 3-இல் நீங்கள் குறிப்பிட்டுள்ள நடிகை வேறு யாருமல்ல. குமாரி இந்திரா. இவ்வலைப்பூவில் பேபி இந்திரா என்ற பெயரில் பதிவிடப்பட்டுள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து விவரங்களும் அதில் உள்ளன. நீங்கள் பார்க்கலாம். விக்கிப்பீடியாவில் பதிவிடுவதற்கு அதில் உரிய அலுவலர்கள் உள்ளனர்.

  2. I think Periya Veettu Pannakaran was his last film. He died before he could complete the dubbing formalities. Somebody else had lent his voice to him. It can be seen clearly in the film.

  3. Sir,
    Thanks for giving us so much information about kallapatti singaram ayya. Im a huge fan of him. I have been searching for one of comedy in the internet for many months and could not find it. Kathu kelathavar pola nadichi irupanga, avar kooda irukavarkum kaathu kekathu , rendu pearum peasitu irupanga. Antha comedy romba nalla irukum. Padam peru therila. Please konjam therinja reply
    Pannunga. Thank you.

  4. Really Nice article about a good actor. Thanks for sharing. Thanks for Bhagyaraj Sir who was bring his comedy to Tamil cinema.

  5. He acted in a small role in AVM Rajan’s Dharisanam movie. He was the vaithiyar who gives a mooligai powder to Cho Ramasamy. I saw the movie quite recently. Recognised him by his voice.

    • உண்மையில் அந்த அப்பாவித்தனமாக ஏற்ற இறக்கம் கொண்ட அவருடைய குரல்வளம் அவருக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருந்தது.

Leave a comment