A.P.Nagarajan

ஏ.பி.நாகராஜன்

பட உலகில் நடிகராக நுழைந்து, கதை- வசன கர்த்தாவாகப் புகழ் பெற்று டைரக்டராக உயர்ந்தவர் ஏ.பி.நாகராஜன். ஏ.பி.நாகராஜன் 1928-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி பிறந்தார். சொந்த ஊர் சேலம் மாவட்டம், சங்ககிரி பக்கத்திலுள்ள அக்கம்மாபேட்டை. தந்தை பெயர் பரமசிவம். தாயார் லட்சுமி அம்மாள்.

நாகராஜனின் தந்தை ஜமீன்தார். எனவே நாகராஜன் பிறந்த போது நல்ல வசதி படைத்திருந்தார்.  ஆனால் சிறு வயதிலேயே தந்தையையும், தாயையும் இழந்தார். பணக்கார குடும்பம் வறுமையில் வாடியது. இதன் விளைவாக பள்ளிக்கூட படிப்பைத் தொடர முடியாமல் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார், நாகராஜன்.
 
ஏ.பி.நாகராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர் “குப்புசாமி” என்பதாகும். இவர் பணியாற்றிய டி.கே.எஸ். நாடக குரூப்பில் மொத்தம் 3 பேர் “குப்புசாமி” என்ற பெயர் கொண்டவர்களாக இருந்தனர்.   இதனால் டி.கே.சண்முகம் அதற்கு ஒரு முடிவு கட்டினார். இவருக்கு பெற்றோர் வைத்த `குப்புசாமி’ என்ற பெயரை மாற்றி “நாகராஜன்” என்று பெயர் சூட்டினார். பிற்காலத்தில் அது புகழ் பெற்ற பெயராக மாறியது.
 
சிவாஜிகணேசன் நாடகங்களில் பெண் வேடத்தில் நடித்து வந்த அதே காலக்கட்டத்தில், ஏ.பி.நாகராஜனும் பெண் வேடத்தில் நடித்து வந்தார். “சங்கீதக் கோவலன்” நாடகத்தில், மாதவியாகவும், கண்ணகியாகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 9. நாடக நோட்டீசில் “9 வயது குயிலினும் இனிய குரல் வாய்ந்த சங்கீத மாஸ்டர் ஏ.பி.நாகராஜன், மாதவியாகவும், பின் கண்ணகியாகவும் நடிக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நாகராஜனுக்கு நல்ல குரல் வளம் இருந்தது. நீண்ட வசனங்களை பேசும் ஆற்றல் பெற்றிருந்தார். தமிழ் இலக்கியங்களை தானாகவே படித்து அதில் சிறப்பு பெற்றவராக விளங்கினார். சிறுவனாக இருந்த நாகராஜன், இளைஞரானபின், அவரே வசனம் எழுதி இயக்கி நடிக்கவும் செய்தார். இப்படி “நால்வர்”, “மாங்கல்யம்”, “ராமாயணம்”, “மச்சரேகை” போன்ற நாடகங்கள் அரங்கேறின. கொஞ்ச காலம் `சக்தி’ நாடக சபையில் பணியாற்றினார். நாகராஜனுடன் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்களும் ஒன்றாக நடித்தனர்.
 
நால்வர்
 
பின்னர் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் உதவி ஒளிப்பதிவாளராக ஏ.பி.நாகராஜன் சேர்ந்தார். 1953-ல் சங்கீதா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம், ஏ.பி.நாகராஜன் எழுதிய “நால்வர்” என்ற கதையை படமாக்கியது. ஒரே குடும்பத்தில் 4 பிள்ளைகள். மூத்தவன் போலீஸ் அதிகாரி. இன்னொருவன் அரசியல்வாதி. மற்றவர்கள் மாறுபட்ட குணம் கொண்டவர்கள். இதில், கடமையே உருவான போலீஸ் அதிகாரியாக நாகராஜன் நடித்தார். ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை குமாரி தங்கம்.
 
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட “நால்வர்”, வெற்றிப்படமாக அமைந்தது. கதை- வசனத்தையும் நாகராஜன் சிறப்பாக எழுதியிருந்தார். இந்தப்படம் வெளிவந்தபின் “நால்வர்” நாகராஜன் என்று அழைக்கப்பட்டார்.
 
எம்.ஏ.வேணு
 
மாடர்ன் தியேட்டர்சில் ஏ.பி.நாகராஜன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு எம்.ஏ.வேணு தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார். சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவரான வேணுவும் அதிகம் படிக்காதவர். மாடர்ன் தியேட்டர்சில் சாதாரண வேலையில் நுழைந்த அவர், தனது திறமையால் நிர்வாகி அந்தஸ்துக்கு உயர்ந்தார். பின்பு எம்.ஏ.வேணு மாடர்ன் தியேட்டர்சை விட்டு விலகி, “எம்.ஏ.வி. பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியை ஆரம்பித்தார். ஏ.பி.நாகராஜனை கதாநாயகனாகப் போட்டு, “மாங்கல்யம்” என்ற படத்தை எடுத்தார். 1954-ல் வெளிவந்த இந்தப் படத்தின் கதை – வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். கே.சோமு டைரக்ட் செய்தார்.ஏ.பி.நாகராஜனுடன் பி.எஸ். சரோஜா, எஸ்.ஏ.நடராஜன், எம். என்.நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். ராஜசுலோசனா இப்படத்தில்தான் அறிமுகமானார். மாங்கல்யமும் வெற்றிப்படமாக அமைந்தது.
 
பின்னர், ஏ.பி.நாகராஜன், கண்ணாம்பா, சூரியகலா ஆகியோரை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து, “பெண்ணரசி” என்ற படத்தை வேணு தயாரித்தார். மனோகரா பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் வெற்றி பெறவில்லை. 1955 கடைசியில் வெளிவந்த “நல்லதங்காள்” படத்தில் ஏ.பி.நாகராஜன் நடித்தார். அவருடன் மனோகர், ஜி.வரலட்சுமி, மாதுரிதேவி ஆகியோர் நடித்தனர்.
 
பின்னர், நடிப்பதை நிறுத்திவிட்டு, கதை- வசனம் எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தினார், நாகராஜன். எம்.ஏ.வேணுவுக்காக அவர் வசனம் எழுதிய படங்களில் முக்கியமானது “சம்பூர்ண ராமாயணம்”. இதில் சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், பத்மினி ஆகியோர் நடித்தனர்.
 
சொந்தப்படம்
 
நடிகர் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து, “ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனி”யை தொடங்கினார், நாகராஜன். “ரத்தக்கண்ணீர்” படத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த எம்.ஆர்.ராதாவை அழைத்து வந்து “நல்ல இடத்து சம்பந்தம்” என்ற படத்தை 28 நாட்களில் தயாரித்து வெளியிட்டார். படம் வெற்றிகரமாக ஓடியது. வி.கே.ராமசாமியுடன் இணைந்து ஏ.பி.நாகராஜன் தயாரித்த படங்களில் முக்கியமானது “மக்களைப் பெற்ற மகராசி.” இதில் சிவாஜியும், பானுமதியும் நடித்தனர். வசனத்தில் மண்ணின் மணம் கமழ்ந்த முதல் தமிழ்ப்படம் “மக்களைப் பெற்ற மகராசி”தான். கொங்குத் தமிழில் ஏ.பி.நாகராஜன் எழுதிய வசனத்தை, அற்புதமாகப் பேசி நடித்தார், சிவாஜிகணேசன்.
 
சிவாஜியின் நடிப்பில் புதிய பரிணாமம் கொண்ட படம் இது. இப்படத்தை டைரக்ட் செய்தவர், கே.சோமு.
 
நவராத்திரி
 
1964-ல் “ஸ்ரீவிஜயலட்சுமி பிக்சர்ஸ்” என்ற சொந்தப்படக் கம்பெனியை நாகராஜன் தொடங்கினார். இந்த படக்கம்பெனியின் முதல் படம் “நவராத்திரி.” இதில் சிவாஜிகணேசன் 9 வேடங்களில் நடித்தார். அவருக்கு ஜோடி சாவித்திரி. கதை- வசனம் மட்டும் எழுதி வந்த நாகராஜன், இந்தப் படத்தில் முதன் முதலாக டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றார். சிவாஜிகணேசனின் 100-வது படமான “நவராத்திரி” சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
 
திருவிளையாடல்
 
அடுத்து ஏ.பி.நாகராஜன் தயாரித்து, திரைக்கதை – வசனம் எழுதி டைரக்ட் செய்த “திருவிளையாடல்” வரலாறு படைத்த படமாகும். ஏ.பி.நாகராஜனின் முதல் வண்ணப்படம் இது. சிவாஜி கணேசன், சாவித்திரி, முத்துராமன், தேவிகா, நாகேஷ், டி.எஸ். பாலையா முதலியோர் நடித்தனர். நக்கீரராக ஏ.பி.நாகராஜன் நடித்தார். சிவனாக சிவாஜியும், தருமியாக நாகேசும் தோன்றிய நகைச்சுவை காட்சி, மிகச்சிறப்பாக அமைந்து, காலத்தை வென்று இன்றும் வாழ்கிறது.
 
“திருவிளையாடல்” தமிழ்நாட்டில் பல நகரங்களில் 25 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய வெள்ளி விழாப்படமாகும். திருவிளையாடலைத் தொடர்ந்து, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருமால் பெருமை” முதலிய புராணப் படங்களை எடுத்தார். தில்லானா மோகனாம்பாள் 1968-ம் ஆண்டில் ஏ.பி.நாகராஜன் தயாரித்து இயக்கிய “தில்லானா மோகனாம்பாள்” ஒரு திரைக்காவியம்.
 
நாதசுரவித்துவான் சிக்கல் சண்முகவடிவேலுவாக சிவாஜி கணேசனும், நடன நங்கை மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்து காட்டினர். தில்லானா மோகனாம்பாள் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. இப்படம், ஆங்கில விளக்க உரையுடன் மேல் நாட்டில் திரையிடப்பட்டது. அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று இந்தப் படத்தின் பிரதியை வாங்கிச்சென்று நாதஸ்வரம், பரதம் ஆகிய கலைகளைப்பற்றி தங்களது மாணவர்களுக்கு விளக்கப்படுத்தி வருகிறது.
 
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் தயாரித்த ‘வா ராஜா வா’ படத்தின் மூலம், இசை அமைப்பாளரானார், குன்னக்குடி வைத்தியநாதன். ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பாடல் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இசைத்தட்டு பாடல்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த அவருக்கு சினிமா படங்களுக்கும் இசை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

ஒரு நாள், டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் படத்தயாரிப்பு மானேஜர் டி.என்.ராஜகோபாலும், அசோசியேட் டைரக்டர் எஸ்.ஆர்.தசரதனும் குன்னக்குடி வைத்தியநாதனின் வீட்டுக்கு வந்தனர். ‘அண்ணன் (ஏ.பி.என்) தொடங்குகிற புதிய படத்திற்கு நீங்கள்தான் மியூசிக் டைரக்டர். அண்ணன் உங்களை உடனடியாக அழைத்துக்கொண்டு வரச்சொன்னார். கார், காத்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக புறப்படுங்கள்’ என்று கூறினார்கள்.

குன்னக்குடி வைத்தியநாதன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுடன் காரில் புறப்பட்டார். ஏ.பி.நாகராஜனின் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது சிரித்துக்கொண்டே வந்த ஏ.பி.என். ‘வா ராஜா வா!’ என்றார். குன்னக்குடி திகைத்து நிற்க, ‘இந்தப் பெயரில் ஒரு படம் எடுக்கிறேன். அந்தப் படத்திற்கு நீங்கள்தான் இசை அமைப்பாளர்!’ என்றார், ஏ.பி.என். புதுமுகங்களை வைத்தே அந்தப் படத்தை எடுத்தார், ஏ.பி.நாகராஜன்.

குன்னக்குடியின் இசை அமைப்பில், ‘இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான்; மனிதன் வடித்த சிலைகளில் எல்லாம் இறைவன் வாழுகிறான்’ என்ற பாடலும், ‘கல் எல்லாம் சிலை செஞ்சான் பல்லவராஜா, அந்த கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா’ போன்ற பாடல்கள் ஹிட் ஆயின. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், பெரிய வெற்றி பெற்றது.

‘தெய்வ’ங்களைத் தமிழ்ப் பேச வைத்த ஏ.பி.நாகராஜன்!
 
“கடைசிக் குடிமகனிலிருந்து உலககைக் காக்கும் ஈசன் குடும்பம் வரை பெண்ணாகப் பிறப்பது பெரும் தவறு என்பது நன்றாகப் புரிந்துவிட்டது” – இப்படிச் சொன்னவர் பரமசிவனின் மனைவி பார்வதி. அவரை இப்படி பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன்.
 
“ஒருத்தி என் தலையிலே ஏறி உட்கார்ந்துக்கிட்டு இறங்கமாட்டேங்குறா.. இன்னொருத்தி என் உடம்புல பாதியை எடுத்துக்கிட்டு பிராணனை வாங்குறா” என்று இருதார மணவாளரான பரமசிவனை புலம்பவைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான். இரண்டும் திருவிளையாடல் படத்தில் அவர் எழுதிய வசனங்கள்.
 
கொங்கு மண்டலத்தில் வளமான நிலவுடைமையாளர் குடும்பத்தில் 1928 பிப்ரவரி 24ந் தேதி பிறந்தவர் அக்கம்மாபேட்டை பரமசிவன் நாகராஜன் (ஏ.பி.நாகராஜன்). அவருக்கு வைக்கப்பட்ட பெயர், குப்புசாமி. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த அவரை பாட்டி மாணிக்கம்மாள்தான் வளர்த்தார். அதனால் சின்ன வயதிலேயே புராண-இதிகாசக் கதைகளை கேட்டு வளரும் வாய்ப்பு அமைந்தது. அது அவரைக் கவர்ந்தது. அவ்வை டி.கே.சண்முகம் நாடகக்குழுவில் சேர்ந்தார். அங்கே நிறைய குப்புசாமிகள் இருந்ததால், அவரது பெயர் நாகராஜன் என மாற்றப்பட்டது. குடும்பத்தினரைப் பிரிந்து ஊர் ஊராகச் சென்று நாடகங்களில் நடித்தார் நாகராஜன். ஸ்த்ரீபார்ட் எனப்படும் பெண் வேடங்களில் நடித்தார். சக்தி நாடகசபாவில் அவர் சேர்ந்தபோது நடிகர்திலகம் சிவாஜிகணேசன், காகா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நண்பரானார்கள். பின்னர், பழனி கதிரவன் நாடக சபா என்ற சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து நாடகங்களை அரங்கேற்றியதுடன் ராணி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் நாகராஜன்.
 
அவர் எழுதி அரங்கேற்றிய ‘நால்வர்’ என்ற நாடகம் 1953ல் திரைப்படமானது. அவரே திரைக்கதை எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்தார். படம் வெளியானபின் அவரை ஒரு பத்திரிகை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் தன் அப்பா பற்றியும் சொந்த ஊரான அக்கம்மாபேட்டை பற்றியும் தெரிவித்திருந்ததைப் படித்த அவரது சொந்தபந்தங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை அடையாளம் கண்டு, நேரில் சந்தித்தனர்.
 
மாங்கல்யம், நல்லதங்காள் உள்ளிட்ட படங்களிலும் ஏ.பி.நாகராஜன் நடித்துவந்தார். எனினும், நடிப்பைவிட படைப்பில்தான் அவருக்குத் தீவிர ஆர்வம் இருந்தது. மேடை நாடகத் தமிழில் திரைப்பட வசனங்கள் அமைந்திருந்த காலத்தில், கொங்கு வட்டார வழக்கில் ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் வசனம் எழுதினார் ஏ.பி.என். ‘நான் பெற்ற செல்வம்’ படத்திலும் அவரது படைப்பாற்றல் வெளிப்பட்டது.
 
தமிழில் வெளியான மிக நீளமான படங்களில் ஒன்று, ‘சம்பூர்ண ராமாயணம்’. 1958ல் வெளியான இப்படத்திற்கு, திரைக்கதை-வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். ராமராக என்.டி.ராமராவும், பரதனாக சிவாஜியும், ராவணனாக டி.கே.பகவதியும் நடித்த படம் இது. ராமன்தான் கதாநாயகன் என்றாலும் ராவணனின் பெருமைகளைச் சொல்ல ஏ.பி.என் தவறவில்லை. அவன் திறமையான மன்னன் மட்டுமல்ல, சிறந்த வீணைக் கலைஞன் என்பதையும் அவனது அவையில் ராகங்களைப் பற்றி அலசும் அருமையான பாடல் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, ராவணனுக்கு 10 தலைகளை ஒட்டவைத்து அரக்கனாகக் காட்டாமல், நம்மைப்போல ஒற்றைத்தலையுடன் ‘சம்பூர்ண ராமாயணத்தில்’ உலவவிட்டிருந்தனர். இந்தப் படம் பெற்ற வெற்றியும், அதற்கு மூதறிஞர் ராஜாஜி அளித்த பாராட்டும் ஏ.பி.நாகராஜனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து சொந்தமாகப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான முதல் படம், ‘வடிவுக்கு வளைகாப்பு’ (1962)
 
ஏ.பி.நாகராஜன் என்ற இயக்குநரைப் பார்த்து தமிழ்த்திரையுலகமும் ரசிகர்களும் முதன் முதலாக வியந்தது, ‘நவராத்திரி’ படத்தில்தான் (1964). ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த அப்படம் பெரும் வெற்றி பெற்றது. 1965ல் ‘திருவிளையாடல்’ படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. பரமசிவன், பார்வதி, முருகன், பிள்ளையார், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்து கதாபாத்திரங்களின் நாவிலும் அழகுத் தமிழ் விளையாடியது. ஒரு புராணப் படத்தில் அமைந்த நகைச்சுவை காட்சி, இன்றைய தலைமுறையையும் சிரிக்க வைக்கிறது என்றால் அது திருவிளையாடல் படத்தில், தருமி வேடத்தில் நடித்த நாகேஷின் அற்புதமான உடல்மொழியுடன் கூடிய நகைச்சுவை காட்சிதான். கடவுளான பரமசிவனையே கலாய்த்துத் தள்ளியிருப்பார் தருமி.
 
திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்த்திரையில் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி வந்தகாலத்தில் அதற்கு நேர்எதிராக புராணப் பாத்திரங்கள் மூலம் ‘தெய்வ’ங்களைத் தமிழ்ப பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன். அவர், திராவிட இயக்கத்திற்கு எதிராக சிலம்புச்செல்வர் ம.பொ.சி. தொடங்கிய தமிழரசுக் கழகத்தில் இணைந்திருந்தார். அதனால், அவருடைய படைப்புகளிலும் அது வெளிப்பட்டது. தி.மு.கவில் மு.கருணாநிதியை கலைஞர் என்று அழைத்ததுபோல தமிழரசு கழகத்தில் ஏ.பி.நாகராஜனை ‘கலைஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தனர். அங்கே ‘கவிஞர்’ கண்ணதாசன், இங்கே ‘கவிஞர்’ கா.மு.ஷெரீப். இரண்டு இயக்கத்திற்குமான போட்டியில், திரையில் செம்மையாக ஒளிர்ந்தது, தமிழ்.
 
திருவிளையாடலைத் தொடர்ந்து, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமலை தென்குமரி, அகத்தியர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புராண படங்களை எடுத்தார் ஏ.பி.நாகராஜன். எல்லாவற்றிலும் அவருடைய தமிழ் விளையாடியது. அவருடைய மிகச்சிறந்த படைப்புகளின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது, ‘தில்லானா மோகனாம்பாள்’. இது புராணமல்ல, புதினம். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையைத் திரைக்கு ஏற்றபடி நாகராஜன் வடிவமைக்க, நாதசுர கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜியும், பரதநாட்டிய கலைஞர் திருவாரூர் மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்து காட்டியிருந்த படம் அது. கலைஞர்களின் வாழ்வை மிகச் சிறப்பான காட்சியமைப்புகள் மூலமாக வெளிப்படுத்திய தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாலையா, மனோரமா, நாகேஷ் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் தங்கள் பங்கினைத் திறம்பட வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர். சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதையும் தில்லானா மோகனாம்பாள் பெற்றது.
 
பிற்காலச் சோழ மன்னர்களில் பெரும்புகழ் பெற்றவரான முதலாம் ராஜராஜனின் வரலாற்றை, தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘ராஜராஜசோழன்’ என்ற பெயரில் இயக்கியவரும் ஏ.பி.நாகராஜன்தான். குருதட்சணை, வா ராஜா வா, குமாஸ்தாவின் மகள், மேல்நாட்டு மருமகள் போன்ற படங்களையும் இயக்கினார்.
 
நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பலப்பல படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இயக்கிய ஒரே படம், ‘நவரத்தினம்’ அதுவே ஏ.பி.என்னின் கடைசிப்படமாகவும் அமைந்தது. 1977ல் அவர் காலமானார். இன்றும் கோவில் திருவிழாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஒ(லி)ளிபரப்பாகும் திருவிளையாடல் படத்தின் வசனங்களில் உரக்க ஒலிக்கும் தமிழில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஏ.பி.நாகராஜன்.
 
-கோவி.லெனின்.
 

ஏ.பி.நாகராஜன்

ஆரம்பகாலத்தில் நாடகத்தில் ஸ்திரிபார்ட் ரோல் செய்தவர்.

டி.கே.எஸ் பிரதர்ஸ் ’குமாஸ்தாவின் பெண்’ நாடகமாக நடத்தப்பட்டபோது அதில் கதாநாயகியாக நடித்தவர் ஏ.பி.நாகராஜன்!

நால்வர்(1953),பெண்ணரசி(1955),நல்லதங்காள்(1955) ஆகிய படங்களில் கதாநாயகன் ஏ.பி.நாகராஜன்! இந்தப்படங்களுக்கு வசனமும் இவரே தான். சாண்டோ சின்னப்பதேவரின் முதல் படம் ’நல்ல தங்கை’(1955)க்கு வசனம் எழுதியதும் நாகராஜன் தான்.

’பொன்னே,புதுமலரே,பொங்கிவரும் காவிரியே

மின்னும் தாரகையே வெள்ளி நிலவே………

அம்புலி வேண்டுமென்றே அடம்பிடித்தே அழுவாய்
பிம்பம் காட்டி உந்தன் பிடிவாதம் போக்கிடுவேன்
அந்த நாள் மறைந்ததம்மா ஆனந்தம் போனதம்மா’

இந்த டி,எம்.எஸ் பாடல் ’நல்லதங்காள்’ படத்தில் ஏ.பி.நாகராஜனுக்குத்தான்.

’நால்வர்’ படத்தில் என்.என்.கண்ணப்பாவும் நடித்தார்.விஜயகுமாரி கூட ஒரு சின்னரோலில் நால்வர் படத்தில் நடித்தார்.

அதே வருடம் கே.சோமு இயக்கி கண்ணப்பா கதாநாயகனாக நடித்த டவுன் பஸ் படத்திற்கு ஏ.பி.என் தான் வசனம்.

கே.சோமு யூனிட்டில் நாகராஜன் அவர்களின் பங்கு மகத்தானது.
கே.சோமு இயக்கிய ’சம்பூர்ண ராமாயணம்’(1958) படத்திற்கும் வசனம் இவரே.

கே.சோமுவின் இந்தப் படத்தை ராஜாஜி பார்த்துவிட்டு ’பரதனை மிகவும் ரசித்தேன்’ என்றார். என்.டி.ராமாராவ் ராமனாக நடித்த இந்தப்படத்தில் பரதனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.

(வாசனின் ஔவையார்(1953) படத்தை அதற்கு முன்னதாக இரு முறை பார்த்த ராஜாஜி தன் டைரிக்குறிப்பில்(10-08-1953) அந்தப்படம் பற்றி சிலாக்கியமாக எழுதாமல் குறை கூறி எழுதியிருந்தார் என்று அசோகமித்திரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.)

திரையுலகில் பல மாற்றங்கள்,மேடுபள்ளங்கள் கண்ட ஏ.பி.நாகராஜன் வாழ்வு பிறரிலிருந்து மிகவும் வேறுபட்டது.

அரசியல் நோக்கு கொண்டிருந்தார். ம.பொ.சியின் தமிழரசுக்கழகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
திரையுலகில் கவி.கா.மு.ஷெரிப் தமிழரசுக்கழகத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்.
நாடகஸ்திரிபார்ட்,திரைப்படகதாநாயகன்,வசனகர்த்தா,தயாரிப்பாளர் என்று பலவித அனுபவங்களுக்குப்பிறகு தான் மிகச்சிறந்த சாதனை இயக்குனர் ஆக பரிமளித்தார்.

வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து சிவாஜி,பானுமதி நடித்த ’மக்களைப் பெற்ற மகராசி’,எம்.ஆர் ராதா நடித்த ‘நல்ல இடத்து சம்பந்தம்’ போன்ற படங்களைத் தயாரித்தார். வி.கே.ஆர் நட்பு கசந்ததில் பின்னால் இவர் பெரிய இயக்குனரான போது ஏபிஎன் படங்களில் வி.கே.ராமசாமி நடித்ததேயில்லை.

பொருளாதாரப் பிரச்னை வாழ்நாள் முழுவதும் இருந்தது.

கடும் நெருக்கடியின்போது எம்.ஆர்.ராதா உதவி செய்தபோது எம்.ஆர்.ராதாவை பக்கத்து அறைக்கு அழைத்து காலில் விழுந்து கும்பிட்டார்.ராதா தன் இயல்புப்படி ’எல்லார் முன் காலில் விழ வெட்கப்பட்டு ரகசியமாக பிறர் அறியாமல் நாகராஜன் என் காலில் விழுகிறான்.’ என்றார்.

ராதாவும் கூட இவர் பின்னால் இயக்கிய எந்தப் படத்திலுமே நடித்ததில்லை.

வடிவுக்கு வளைகாப்பு,குலமகள் ராதை படங்களை இயக்கிய பின் சிவாஜியின் 100வது படம் ’நவராத்திரி’  இயக்கிய பெருமை.

அதன் பின் வாழ்வில் ஒரு மாற்றம். திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்,கந்தன்கருணை, திருவருட்செல்வர்,திருமால் பெருமை போன்ற படங்களை இயக்கினார். இதனால் இன்று வரை ஏ.பி.என் என்றால் புராணப்பட இயக்குனர் என்றே பரவலாக அறியப்படுகிறார்.

திருமால் பெருமை வந்த அதே வருடம் தான் ஏ.பி.நாகராஜனின் மாஸ்டர் பீஸ் ’தில்லானா மோகனாம்பாள்’ கூட வெளிவந்தது.

நாகேஷ் நடித்த தருமி,வைத்தி கதாபாத்திரங்களை இயக்கி அவரை சிகரத்துக்கு கொண்டு சென்ற இயக்குனர்.

நவராத்திரி,திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள் இவரை இன்று அமரத்துவம் பெறச்செய்து விட்டன.

சிவாஜி ஏனோ அவரை இயக்கிய இயக்குனர்களில் அவருக்குப் பிடித்தவராக ’தெய்வமகன்’ ’பாரத விலாஸ்’ ’பாபு’ படங்களை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தரைத்தான் சொல்வார்.

திருவிளையாடலில் சிவாஜி,நாகேஷ் நடித்த அந்த பிரபல எபிசோடில் நக்கீரனாக ஏ.பி.என். பிரமாதமாக நடித்தார்.ஆனால் அதன் பின் அவர் இயக்கிய படங்கள் எதிலும் நடித்ததில்லை.

மிக பிரமாண்ட படங்களாக எடுத்த பின் சின்ன பட்ஜெட் படங்களாக திருமலை தென்குமரி,கண்காட்சி எடுத்தார். பின் சின்ன பட்ஜெட் அகத்தியர்,திருமலை தெய்வம் புராணப்படங்கள்.

மீண்டும் பிரமாண்டமாக  ‘ராஜராஜசோழன்’சினிமாஸ்கோப் ( டைட்டில் கார்ட்- நடிகர் திலகம் உயர்திரு சிவாஜிகணேசன்)

கமலஹாசன் இவர் இயக்கத்தில் சிவகுமாருடன் நடித்த குமாஸ்தாவின் மகள் (1974) – இந்தப் படம் 1941-இல் டி.கே.எஸ் சகோதரர்கள் நடித்து வெளி வந்த குமாஸ்தாவின் பெண் ரீமேக். இந்த நாடகத்தில் தான் ஏபிஎன் கதாநாயகியாக நடித்திருந்தார்! இவர் இயக்கிய போது அதில் கதாநாயகி ஆர்த்தி புட்டண்ணா.

கமல் நடித்த இன்னொரு ஏபிஎன் படம் ’மேல் நாட்டு மருமகள்’ அதில் ஒரு நடனமாட பம்பாயிலிருந்து வந்த வாணி கணபதியை  பின்னால் முதல் மனைவியாக்கியது.

ஏபிஎன் வாழ்வில் கடைசியாக  பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக  எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்கி அவருக்கு ஒன்பது நாயகியர் என்று ’நவரத்தினம்’ படத்தை இயக்கினார்.

நாகராஜனின் குரல் விஷேசமானது.அவர் படங்களில் “ பேரன்பு மிக்க ரசிகப்பெருமக்களுக்கு என்று ஆரம்பித்து படத்தைப் பற்றி பேசுவார்.

கண்காட்சி படத்தில் கே.டி.சந்தானத்தின் சந்தப்பாடல் ’அனங்கன் அன்பன் வசந்தன் மன்மதன் என்று வணங்கும் என்னுயிர் மன்னவா’விற்கு துவக்கத்தில் தொகையறாவாக ஏபிஎன் குரல்:

“வெண்ணிலவைக் குடை பிடித்து வீசு தென்றல் தேரேறி……

மென்குயில் தான் இசை முழங்க, மீன் வரைந்த கொடியசைய…..

கண்கவரும் பேரழகி,கனகமணி பொற்பாவை…….

அன்ன நடை ரதியுடன்,அழகு மதன் வில்லேந்தி………

தண்முல்லை,மான்,தனி நீலம்,அசோகமெனும்……

வண்ணமலர் கணை தொடுத்தான்…….

வையமெல்லாம் வாழ்கவென்றே!”

ஏபி நாகராஜனுக்கு மனைவி மக்கள் இருந்தார்கள்.

நடிகை வடிவுக்கரசியின் அப்பா ராணிப்பேட்டை சண்முகமும் நாகராஜனும் சகலைபாடிகள். வடிவுக்கரசியின் பெரியப்பா ஏ.பி.என்.

நடிகை குமாரி பத்மினி இவருடைய நிழலில் தான் வாழ்ந்தார். கண்காட்சி,திருமலை தென்குமரி போன்ற படங்களில் நடித்தவர்.

ஏபிஎன் மறைந்து பல வருடங்களுக்குப் பின் இந்த நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏபிஎன் டப்பிங் தியேட்டரில் அவர் புராணப்படங்களுக்காக ரெஃபெர் செய்த புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன்.புரட்டி வாசித்தும் இருக்கிறேன்.

 
திருவிளையாடல் படத்தில் சிவாஜிகணேசனுடன் ஏ.பி.நாகராஜன்
ImageImage
Image
 
20.2.2015 அன்று தி இந்து நாளிதழ் டூரிங் டாக்கீஸ் பகுதியில் வெளிவந்த கட்டுரை.
நடிப்பைத் துறந்த படைப்பாளி!

பிரதீப் மாதவன்

Published: February 20, 2015 10:45 ISTUpdated: February 20, 2015 10:45 IST
nagarajan_2_2316881g
‘காரைக்கால் அம்மையார்’ படப்பிடிப்பில் சிவகுமார், ஸ்ரீவித்யா, ஏ.வி.எம். ராஜன் ஆகியோருக்கு காட்சியை விளக்குகிறார் ஏ.பி.என்.

நடிகர் திலகத்தின் திரைப் பயணத்தின் மைல்கல்லாக அமைந்த படங்கள் பல. அவற்றில் நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மூன்றையும் அவரது ரசிகமணிகள் தலையில் தூக்கி வைத்துச் சீராட்டியிருக்கிறார்கள். இந்தப் படங்களின் கர்த்தா ஏ. பி. நாகராஜன். தமிழ் நாடகம் தந்த நல்முத்து இவர். புராணத்தை மட்டுமே வைத்துக் காலம் தள்ளிக்கொண்டிருந்த தமிழ் நாடகத்துக்குள் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்திப் புது ரத்தம் பாய்ச்சியவர்கள் டி.கே.எஸ் சகோதரர்கள்.

இவர்களது மதுரை பால சண்முகானந்த சபா நாடகக் குழுவில் பயிற்சி பெற்று உருவானவர்தான் ஏ.பி. என். அன்று இளம் சிறுவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்து அவர்களைப் பெண் வேடங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதுபோன்ற நாடக சபாக்களில் சுட்டுப்போட்டாலும் பெண் பிள்ளைகளைச் சேர்க்க மாட்டார்கள். மதுரை பால சண்முகானந்த சபா பின்னாளில் டி. கே. எஸ் நாடக சபா என்று பெயர் மாறியபோது அதில் பத்து வயதுச் சிறுவனாகச் சேர்த்துவிடப்பட்டார் ஏ. பி. நாகராஜன். அவரைச் சேர்த்துவிட்டவர் அவருடைய பாட்டி மாணிக்கத்தம்மாள்.

கொங்குச் சீமையின் தமிழ் விளக்கு

ஈரோடு மாவட்டத்தில் அக்கம்மாபேட்டை என்ற சிற்றூரில் பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்த்தார். பாட்டி சிறந்த கதைசொல்லியாக இருந்தார். கதையின் இடையிடையே பாடியும் காட்டுவார். இப்படிப் பாட்டி சொன்ன இதிகாசக் கதைகளைக் கேட்டு வளர்ந்த நாகராஜன் பாட்டி பாடிக்காட்டிய பாடல்களைக் கிளிப்பிள்ளை போலத் திரும்பிப் பாடலானார்.

அவரது திறனறிந்தே டி.கே.எஸ். நாடகக்குழுவில் சேர்த்துவிட்டார் பாட்டி. தனது பதினைந்தாவது வயது முதல் ஸ்திரி பார்ட்டுகளில் நடிக்க ஆரம்பித்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ்பெற்ற சமூக நாடகமாக விளங்கியது ‘குமாஸ்தாவின் பெண். அதில் கதாநாயகியாக நடித்த நாகராஜனுக்கு மற்ற சபாக்களில் ஸ்திரி பார்ட் போட அழைப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் தனது இருபதாவது வயதில் பெண் வேடங்களில் நடிக்க விருப்பமின்றிச் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். அங்கே நாகராஜனுக்கு நண்பர்களாகக் கிடைத்தவர்கள் சிவாஜி கணேசனும், காக்கா ராதாகிருஷ்ணனும். ஏற்று நடிக்கும் தனது கதாபாத்திரங்களுக்கான வசனத்தைக் கதைக்குத் தக்க, தாமே திருத்தி மாற்றி எழுதிக்கொண்டார். இதனால் நாடகாசிரியர்களுடன் நாகராஜனுக்குக் கடும் கருத்துப் பிணக்கு ஏற்பட்டது. சில வருடங்களுக்குப் பின்னர் சக்தி நாடக சபாவிலிருந்தும் வெளியேறித் தனது 25வது வயதில் பழனி கதிரவன் நாடக சபா என்ற தனி சபாவைத் தொடங்கினார்.

ஏ.பி. என்னின் ‘நால்வர்’ நாடகம் புகழ்பெறத் தொடங்கியது. இந்த நாடகத்தை சங்கீத பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. இதற்காக நாடகக் கதையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து திரைக்கதை வசனம் எழுதினார் நாகராஜன். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையில் தஞ்சை ராமைய்யா தாஸ் பாடல்கள் எழுதிய இந்தப் படத்தில், கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

படம் வெற்றிபெற்றது. கதாநாயகனாகச் சிறந்த நடிப்பைக் கொடுத்தது மட்டுமல்ல, நல்ல வசனமும் எழுதியதற்காகப் பாராட்டப்பட்டார். அடுத்து வந்த ஆண்டுகளில் பெண்ணரசி (1955), நல்லதங்காள் (1955) ஆகிய படங்களில் கதாநாயகனாகத் தொடர்ந்ததோடு தான் நடிக்கும் படங்களுக்குத் தொடர்ந்து அழுத்தமாகவும் ஈர்க்கும் விதமாகவும் வசனம் எழுத ஆரம்பித்தார் ஏ.பி. நாகராஜன். இதனால் அவருக்குத் திரைக்கதை வசனம் எழுத வாய்ப்புகள் குவிந்தன. இயக்குநர் கே. சோமுவின் படக்குழுவில் எழுத்தாளராக நிரந்தரமாக இடம் பிடித்தார். நடிப்பைத் துறந்து படைப்பை கைகொண்டார்.

வார்த்தை வேந்தர்

நாடக வசனங்களின் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. நாடக வசனங்களின் சாயலே திரைப்பட வசனங்களிலும் தாக்கம் செலுத்தியபோது கொங்கு வட்டார வழக்கில் ‘மக்களைப் பெற்ற மகராசி’(1957) படத்துக்கு வசனம் எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ஏ.பி.என். ‘டவுன்பஸ்’, ‘நான் பெற்ற செல்வம்’ஆகிய படங்களின் வெற்றியில் அவரது வசனங்கள் முக்கிய இடத்தை எடுத்துக் கொண்டன. அடுத்த ஆண்டே கே.சோமு இயக்கத்தில் ராமராவ் ராமனாகவும் சிவாஜி பரதனாகவும் நடித்த ‘சம்பூர்ண ராமாயணம்’(1958) படத்துக்கும் வசனம் எழுதினார் நாகராஜன்.

இந்தப் படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி பரதன் பேசும் வசனங்களைக் கவனித்து “பரதனின் பாசத்தை மிகவும் ரசித்தேன்” என்று பாராட்டினார். இதனால் ஏ.பி. நாகராஜனின் புகழ் பரவியது. ராஜாஜி பரதனைப் பாராட்டினார் என்றால் அந்தப் படத்தில் ராவணனை இசைக்கலைஞனாகப் பெருமைப்படுத்தி எழுதியதை ம.பொ.சி பாராட்டினார். மா.பொ.சியின் வழிகாட்டலில் அவரது தமிழரசுக் கழகத்தில் இணைந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டினார்.

புதுமைகளின் காதலர்

சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணன் வேடத்தைப் பத்து தலையுடன் அரக்கன்போலச் சித்தரிக்க வேண்டாம் என்று இயக்குநர் சோமுவுக்கு எடுத்துக் கூறிய ஏ.பி. நாகராஜன், புராணக் கதைகளைப் படமாக்கினாலும், வரலாற்று, சமூகக் கதைகளைப் படமாக்கினாலும் அவற்றில் தொழில்நுட்பப் புதுமைகளையும் நிகழ்காலத்தின் நடப்புகளை வசனத்திலும் புகுத்தத் தவறவில்லை. சிவாஜி – சாவித்திரி நடிப்பில் உருவான ‘ வடிவுக்கு வளைகாப்பு’(1962) படத்தின் மூலம் இயக்கத்தில் கால் பதித்தார் ஏ.பி. என். அதன்பிறகு சிவாஜியுடன் அவர் இணைந்து பணிபுரிந்த பல படங்கள் தமிழ்சினிமாவுக்கு முக்கியப் படங்களாக அமைந்தன.

சிவாஜியின் 100-வது படமாகிய ‘நவராத்திரி’யில் (1964) அவருக்கு ஒன்பது மாறுபட்ட வேடங்களை உருவாக்கினார். அந்தக் காவியத்தைக் கண்டு தமிழ்த் திரையுலகமும் தமிழ்மக்கள் மட்டும் வியக்கவில்லை. அப்படத்தைக் கண்ட ஐரோப்பிய நடிகர்கள் நடிகர் திலகத்தை அமெரிக்காவுக்கு அழைத்தனர். அடுத்த ஆண்டே அவரது இயக்கத்தில் 1965-ல் ‘திருவிளையாடல்’ வெளியானது. சிவன், பார்வதி, முருகன், விநாயகர், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்துக் கதாபாத்திரங்களும் பேசிய சுத்தமான எளிய செந்தமிழ், தமிழ் மக்களின் நாவில் அரைநூற்றாண்டு காலம் நடனமாடியது. சிவபெருமானுடன் வறிய புலவன் தருமியின் வாக்குவாதம் தமிழகமெங்கும் நகைச்சுவை ரசவாதம் செய்தது.

திருவிளையாடலைத் தொடர்ந்து, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமலை தென்குமரி, அகத்தியர், காரைக்கால் அம்மையார் உள்படப் பல புராணப் படங்களை மிக உயர்ந்த உரையாடல் தமிழில் எடுத்தார் ஏ.பி.நாகராஜன். இவரது சாதனை மகுடத்தில் ‘தில்லானா மோகனாம்பாள், தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘ராஜராஜசோழன்’ஆகியவை உண்டு . இந்தியாவுக்கு வெளியே விருதுபெற்ற முதல் தமிழ்த் திரைப்படத்தை எடுத்தவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

நடிகர் திலகம் சிவாஜியை வைத்துப் பல படங்களை இயக்கிய இவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம், ‘நவரத்தினம்’. அதுவே அவரது கடைசிப் படம். 1977-ல் நாகராஜன் மறைந்து விட்டாலும் அவரது திரைத் தமிழ், தமிழ்த் திரை இருக்கும் வரை மறையப்போவதில்லை.

நன்றி:- http://tamil.thehindu.com/cinema/cinema-others/

ஏ.பி.நாகராஜன் கதை, வசனம் எழுதியதோடு கதாநாயகனாகவும் நடித்த “மாங்கல்யம்” 1954 படத்தின் தலைப்பு

Maangalyam 1954-01

“மாங்கல்யம்” 1954 படத்தில் எம்.என்.நம்பியாருடன் ஏ.பி.நாகராஜன்AP.Nagarajan-Maangalyam 1954-1AP.Nagarajan-Maangalyam 1954-AP.Nagarajan-M.N.Nambiar-Maangalyam 1954-

“மாங்கல்யம்” 1954 படத்தில் பி.எஸ்.சரோஜாவுடன்  ஏ.பி.நாகராஜன்AP.Nagarajan-BS.Saroja-Maangalyam 1954-1AP.Nagarajan-BS.Saroja-Maangalyam 1954-

“மாங்கல்யம்” 1954 படத்தில் ராஜசுலோச்சனாவுடன்  ஏ.பி.நாகராஜன்AP.Nagarajan-Rajasulochana-Maangalyam 1954-

ஏ.பி.நாகராஜன், அவரது தாயார் மற்றும் மனைவி ராணியுடன்

கீழே:- ஏ.பி.நாகராஜனின் மனைவி ராணி, மகன் பரமசிவன், நடிகை குட்டி பத்மினி

கீழே:- ஏ.பி.நாகராஜனின் மனைவி ராணி, மகன் பரமசிவன், நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் எஸ்.ஆர்.தசரதன்

புகைப்படங்கள் நன்றிக்குரியவர் :- கே.பி.ரி.வி.

6 comments on “A.P.Nagarajan

  1. On Thursday, April 21st, 1977, that is approximately 7 weeks (48 days exactly) after NAVARATHINAM ‘s release, A.P. Nagarajan the director-producer dies from a heart attack.

    It was necessary question to make another movie.

    MGR wanted to catch of this disappointment, not to stay on a failure with A.P. Nagarajan.

    Make him earn money with CAPTAIN RAJA…

    • விரிவான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி திரு.Ferdinand LACOUR.

  2. I think sivaji went to USA in the year 1962.i dont think there is any connection between NAVARATHRI pic which came later.

  3. தமிழ்த் திரையுலகின் பல்துறை வேந்தர் ஏ.பி.நாகராஜன்

    (கரிகாலன்)

    தமிழ்த் திரையுலகில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி, கதை வசனகர்த்தாவாக புகழ் பெற்று, பின்னர் 25 படங்களின் இயக்குநராகவும் உயர்ந்து பிரபலமானவர், பல்துறை வேந்தர் என்று போற்றப்பட்ட ஏ.பி.நாகராஜன் ஆவார். சேலம் மாவட்டம் அக்கம்மாபேட்டை என்ற ஊரில், 1928ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24ஆம் நாளில் பிறந்தவரான நாகராஜனுக்கு, பெற்றோர் இட்ட பெயர் குப்புசாமி.தனது 7ஆம் வயதிலேயே டி.கே.எஸ் நாடகக் குழுவில் சேர்ந்த இவருக்கு, அங்கு குப்புசாமி என்ற பெயரில் 3 பேர் பணியாற்றியதால், அந்நாடக நிறுவனத்தின் நிர்வாகி டி.கே.சண்முகம் இவரது பெயரை நாகராஜன் என்று மாற்றி அமைத்தார்.

    ஆரம்பத்தில் நாடகங்களில் நாகராஜன் பெண் வேடங்களிலேயே அதிகமாக நடித்தார்.டி.கே.எஸ் சகோதரர்களின் ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தில் நாகராஜன் பெண் வேடமேற்று கதா நாயகியாக நடித்தார்.’சங்கீதக் கோவலன்’ என்ற நாடகத்தில் கண்ணகியாகவும் மாதவியாகவும் இரட்டை வேடங்களில் நடித்தார்.நல்ல குரல் வளம் பெற்றிருந்த நாகராஜன், நீண்ட வசனங்களையும் பிசிறின்றி பேசும் ஆற்றலைக் கொண்டிருந்தார்.தமிழ் இலக்கியங்களை தானாகவே படித்து அவற்றில் திறமை பெற்றவராக விளங்கினார்.நாகராஜன் இளைஞனான பின்னர் தானே சொந்தமாக நாடகங்களை அமைத்து, அவற்றுக்கு கதை வசனங்களை எழுதி நடிக்கவும் செய்தார்.உருவான ‘நால்வர்’, ‘மாங்கல்யம்’, ‘இராமாயணம்’, ‘மச்சரேகை’ போன்ற நாடகங்கள் இவரின் சொந்தப் படைப்புகளாக உருவாகின.பின்னர் ‘சக்தி’ நாடக சபையில் சிலகாலம் பணியாற்றி தொடர்ந்து, சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் உதவி ஒளிப்பதிவாளராகவும் தொழில் புரிந்து அன்றைய பல நடிகர்களூடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார்.

    1953இல் சங்கீதா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் நாகராஜனின், ‘நால்வர்’ கதையை திரைப் படமாக தயாரித்தபோது, அப்படத்திற்கு வசனமெழுதி, அதிலே கதா நாயகர்களில் ஒருவராக நாகராஜன் நடித்தார்.மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய ஏ.ஏ.வேணுவுடன் நாகராஜனுக்கு சிநேகம் ஏற்பட்டது. 1954இல் வேணு அந்நிறுவனத்திலிருந்து விலகி எம்.ஏ.வி பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்தப் பட நிறுவனத்தை தொடங்கி, நாகராஜனை கதா நாயகனாக்கி ‘மாங்கல்யம்’ என்ற படத்தை தயாரித்தார்.இப்படம் வெற்றி பெற்றது.1955இல் மீண்டும் வேணு, எம்.ஏ.வி பிக்சர்ஸ் தயாரிப்பாக நாகராஜனை நாயகனாக்கி ‘பெண்ணரசி’ என்ற படத்தை உருவாக்கியதோடு, இதே ஆண்டில் நாகராஜனை வசனகர்த்தாவாகக் கொண்டு, ‘டவுன் பஸ்’ படத்தை தயாரித்தார்.இந்த ஆண்டில், பார்வர்ட் ஆர்ட் பிலிம்ஸ் ‘நல்ல தங்கை’ என்ற படத்திற்கு நாகராஜன் வசனமெழுதினார்.பின் இதே ஆண்டில் மெட்ராஸ் மூவிடோன் தயாரிப்பில் வெளியீடு கண்ட ‘நல்ல தங்காள்’ படத்திலும், தொடர்ந்து ஸ்ரீமதி பிக்சர்ஸ் ‘ஆசை அண்ணா அருமைத் தம்பி’ படத்திலும் நாகராஜன் நாயகனாக நடித்தார்.

    பின்னர் நடிப்பதை விட்டு விட்டு, படங்களுக்கு திரைக்கதை வசனமெழுதுவதில் ஆர்வம் காட்டிய நாகராஜன், 1956இல் பாரகன் பிக்சர்ஸ் ‘நான் பெற்ற செல்வம்’ படத்திற்கு கதை வசனமெழுதினார். தொடர்ந்து 1957ஆம் ஆண்டில் நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து, ஸ்ரீ லஷ்மி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தை தயாரித்து இதற்கு கதை வசனமெழுதினார்.இதனையடுத்து இவ்விருவரும் 1958இல் இதே பட நிறுவனத்தின் பெயரில் ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்தை தயாரித்தபோது, வி.கே.ராமசாமியின் கதைக்கு நாகராஜனே வசனகர்த்தா.இதே ஆண்டில் மீண்டும் வேணுவின் எம்.ஏ.வி. பிக்சர்ஸ் தயாரிப்பின் மாபெரும் வெளியீடான ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்திற்கும் கதை வசனகர்த்தாவாக நாகராஜன் பணியாற்றினார். இந்த ஆண்டில் மற்றொரு திரையீடான ராயல் பிலிம்ஸ் ‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ படத்திற்கும் நாகராஜன் கதை வசனமெழுதினார்.

    1959ஆம் ஆண்டில் பிரபல பாடலாசிரியர் மருதகாசி சொந்தமாகத் தயாரித்த ‘அல்லி பெற்ற பிள்ளை’ படத்திற்கு கதை வசனமெழுதிய நாகராஜன், இதே ஆண்டில் மீண்டும் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து ஸ்ரீ லஷ்மி பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தாயைப் போல பிள்ளை நுலைப் போல சேலை’ என்ற படத்திற்கும் கதை வசனமெழுதினார்.1960ஆம் ஆண்டில் அகிலனின் புகழ்பெற்ற நாவலான ‘பாவை விளக்கு’ படத்திற்கு நாகராஜன் வசனமெழுதினார்.1962ஆம் ஆண்டில் வி.கே.ஆருடன் இணைந்து இவர் தயாரித்த ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்திற்கு கதை வசனமெழுதியதோடு, இதனை முதன் முதலாக இயக்கும் பணியையும் ஏற்றார்.1963இல் ‘குலமகள் ராதை’, பின்னர் 1964இல் ‘நவராத்திரி’ ஆகியப் படங்களுக்கும் கதை வனமெழுதி இவற்றை நாகராஜன் துணிந்து இயக்கினார்.

    ‘திருவிளையாடல்’ (1965), ‘கந்தன் கருணை’ (1966) ‘திருவருட் செல்வர்’ (1967) ஆகிய தொடர்ச்சியான புராண வண்ணப் படங்களை சிவாஜியைக் கொண்டு கதை வசனமெழுதி இயக்கிய நாகராஜன், திருவிளையாடல் படத்தில் நக்கீரனாகவும் திறம்பட நடித்தார்.1967இல் இவர் வசனமெழுதி இயக்கிய ‘சீதா’ என்ற படம் வெளி வந்தது.1968இல் ‘திருமால் பெருமை’ மற்றும் ‘தில்லானா மோகானாம்பாள்’ ஆகியப் படங்கள் நாகராஜனின் இயக்கத்தில் அவரின் ஆழ்ந்த வசனங்களை தமிழ் ரசிகர்களுக்கு புலப்படுத்தின.1969இல் ‘வா ராஜா வா’ மற்றும் ‘குருதட்சிணை’ ஆகியப் படங்கலையும் நாகராஜன் கதை வசனமெழுதி இயக்கினார்.1970இல் ‘விளையாட்டுப் பிள்ளை’ மற்றும் ‘திருமலை தென்குமரி’ ஆகியப் படங்களும், ‘கண்காட்சி’ (1971), ‘அகத்தியர்’ (1972), ஆகியப் படங்களிலும் நாகராஜனின்’ இயக்கத்தில் அவரின் கருத்தாழமிக்க வசனங்களால் வரவேற்பைப் பெற்றன.1973இல் ‘திருமலை தெய்வம்’, ‘காரைக்கால் அம்மையார்’ மற்றும் ‘ராஜ ராஜ சோழன்’ ஆகியப் படங்கள் இவரின் கதை வசனம் இயக்கத்தால் பிரபலமாயின.’குமாஸ்தாவின் மகள்’ (1974), ‘மேல் நாட்டு மருமகள்’ (1975), ‘ஸ்ரீ கிருஷ்ண லீலா’ (1977) ஆகியப் படங்களும் நாகராஜனின் கை வண்ணத்தால் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றன.இவர் ஆகக் கடைசியாக மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து
    9 கதாநாயகிகளைக் கொண்டு ‘நவரத்தினம்’ (1977) என்ற படத்திற்கு கதை வசனமெழுதி இயக்கிய பின்னர், இதே ஆண்டில் சென்னையில் காலமானார்.நாகராஜன் மறைந்து விட்டாலும் அவரது திரைத் தமிழ், தமிழ்த் திரை இருக்கும் வரை மறையப் போவதில்லை

    நாகராஜனின் சாதனைப் படங்களாக ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘ராஜ ராஜ சோழன்’, ‘அகத்தியர்’ போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.இவற்றைத் தவிர்த்து சிவாஜியை 9 வேடங்களில் நடிக்க வைத்து இவர் உருவாக்கிய ‘நவராத்திரி’ மற்றும் கொங்கு தமிழ் வசனங்களைக் கொண்ட ‘மக்களைப் பெற்ற மகராசி’ ஆகியப் படங்களும் தமிழர் நெஞ்சங்களை விட்டு என்றென்றும் அகலாது என்று கூறுவதும் மிகையன்று.

    (நிறைவு)

    • பக்திப் படங்களாயினும் சரி. சமூகப் படங்களாயினும் சரி. இவருக்கு நிகர் இவரே. இவர் எந்தப் படத்தை வெளியிட்டாலும் எல்லாவற்றிற்கும் இவரால் இதை மட்டுமே எடுக்க இயலும் என்று ஏளனம் செய்தவர்கள் ஏராளம். ஆனால் அதை ஒரு சவாலாக எடுத்து வெற்றியடையச் செய்து தூற்றியவர்களின் வாயை அடைத்துக் காட்டியவர். உதாரணம்: வா ராஜா வா, கண் காட்சி, திருமலைத் தென்குமரி, மேல் நாட்டு மருமகள். ‘ஸ்ரீ கிருஷ்ண லீலா இவரது மறைவுக்குப் பின் வெளிவந்தது. நவரத்தினம் படம் மட்டும் எடுக்காமலிருந்திருந்தால் மேலும் பல வருடங்கள் படங்களைத் தந்திருப்பார். பாவம் 51 வயதில் அகால மரணமடைந்தார்.

  4. தமிழ்த் திரையுலகில் தன் கடின உழைப்பால் தனக்கென நிலையான இடத்தை தக்கவைத்துக்கொண்டவர் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள்.

Leave a comment