T.K.Shunmugam

ரி.கே.சண்முகம் [பிறப்பு-1912-மறைவு-1973]

தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்; பல திரைப்படங்களில் நடித்தவர்; ஸ்ரீதரை திரை உலகுக்கு அறிமுகம் செய்தவர் – “அவ்வை” டி.கே.சண்முகம்.

நாடக உலகிலும், திரை உலகிலும் பிரபல நட்சத்திரங்களின் குருவாகத் திகழ்ந்தவர்; “அண்ணாச்சி” என்று மரியாதையாக அழைக்கப்பட்டவர். இத்தகைய சிறப்புக்குரிய டி.கே.சண்முகம், 1912 ஏப்ரல் 26-ந்தேதி திருவனந்தபுரத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை. தாயார் சீதை அம்மாள்.
“மனோன்மணியம்” தந்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, டி.கே.சண்முகத்துக்கு மாமன்முறை. கண்ணுசாமிப்பிள்ளை தொடக்கத்தில் ஒரு அச்சகத்தில் பணியாற்றினார். பின்னர் நாடக நடிகரானார். இவருக்கு நான்கு புதல்வர்கள். அவர்களில் மூன்றாமவர் டி.கே.சண்முகம். டி.கே.சங்கரன், டி.கே.முத்து சாமி இருவரும் மூத்தவர்கள். டி.கே.பகவதி இளையவர்.
சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த பாய்ஸ் கம்பெனியில், தனது 4 மகன்களையும் கண்ணு சாமிப்பிள்ளை சேர்த்துவிட் டார். அப்போது சண்முகத்திற்கு வயது 6.
பின்னர் சதாவதானம் தெ. பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், எம்.கந்தசாமி முதலியார் ஆகியோரிடமும் சண்முகம் பயிற்சி பெற்றார்.
1923-ல் தந்தை கண்ணுசாமிப் பிள்ளை காலமானார். நான்கு சகோதரர்களும், ராமர், லட்சுமணன், பரதன், சத்ருகனன் போல மிக ஒற்றுமையாக இருந்து, 1925 மார்ச் 31-ந்தேதி “பால சண்முகானந்த சபா” என்ற சொந்த நாடகக் குழுவைத் தொடங்கினர். சமுதாய சீர்திருத்தங்களையும், சரித்திரங்களையும் இக்குழுவினர் நடத்தினர். “குமாஸ்தாவின் பெண்”, “அந்தமான் கைதி”, “உயிரோவியம்”, “முள்ளில் ரோஜா”, “மனிதன்”, “சிவலீலா” போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
1943-ல் “அவ்வையார்” நாடகத்தில் அவ்வையார் வேடத்தில் டி.கே.சண்முகம் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். 31 வயதே ஆன சண்முகம், பெண் வேடத்தில் -அதுவும் வயது முதிர்ந்த பாட்டியாக, தனது தோற்றத்தையும், பேச்சையும் மாற்றிக் கொண்டு, அவ்வையாராகவே வாழ்ந்துக் காட்டினார்.
இதன் காரணமாக அவர் “அவ்வை சண்முகம்” என்று அழைக்கப்பட்டார். நாடகங்களை நடத்திக்கொண்டே திரைப்படங்களிலும் சண்முகம் நடித்தார். “மேனகா”, “பெண் மனம்”, “பில்கணன்” முதலிய படங்களில் நடித்த சண்முகம், பின்னர் அறிஞர் அண்ணா கதை – வசனம் எழுதி ஏவி.எம். தயாரித்த “ஓர் இரவு” படத்தில் பிரதான வேடத்தில் நடித்தார்.
பின்னர் கேமரா மேதை கே.ராம்நாத் டைரக்ட் செய்த “மனிதன்” படத்தில் டி.கே.சண்முகமும், டி.கே.பகவதியும் நடித்தனர். புரட்சிகரமான கதை அம்சம் கொண்ட “மனிதன்”, நாடகமாக வெற்றி பெற்றது. திரையில் வெற்றி பெறவில்லை.
பிறகு ஸ்ரீதர் கதை- வசனம் எழுதி, நாடகமாக வெற்றி பெற்ற “ரத்த பாசம்” கதையை, டி.கே.எஸ். சகோதரர்கள் சொந்தமாக திரைப்படமாகத் தயாரித்தனர். டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகியோருடன் அஞ்சலிதேவி, எம்.எஸ்.திரவுபதி ஆகியோரும் நடித்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம்தான் ஸ்ரீதரின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.
சிவாஜிகணேசன் நடித்த “கப்பலோட்டிய தமிழன்” படத்தில் சுப்பிரமணிய சிவாவாக சண்முகம் உணர்ச்சிகரமாக நடித்தார். “சம்பூர்ண ராமாயணம்” படத்தில் டி.கே.பகவதி ராவணனாக பிரமாதமாக நடித்தார்.
டி.கே.சண்முகத்தை விட அவர் தம்பி டி.கே.பகவதி உயரமாகவும், கம்பீரமாகவும் இருப்பார். இதனால், நாடகங்களிலும், சினிமாவிலும் டி.கே.சண்முகத்துக்கு அண்ணனாகவும், அப்பாவாகவும் டி.கே.பகவதி நடிப்பார்!)
நிரந்தரக் குழுவாக ஊர் ஊராகச் சென்று நாடகங்கள் நடத்தி வந்த “பால சண்முகானந்த சபா”வை 1950-ல் கலைத்து விட்ட டி.கே.சண்முகம், பிறகு “ராஜ ராஜசோழன்”, “சிவகாமியின் சபதம்” “வாழ்வில் இன்பம்” போன்ற நாடகங்களை அவ்வப்போது நடத்தி வந்தார்.
குழந்தைகளுக்காக நாடகம் நடத்த விரும்பிய சண்முகம், கவிஞர் திருச்சி பாரதனைக் கொண்டு, “அப்பாவின் ஆசை”, “பலாப்பழம்” ஆகிய நாடகங்களை எழுதச்செய்து அரங்கேற்றினார். இரண்டு நாடகங்களிலும், அப்போது 10 வயது சிறுவனாக இருந்த கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
டி.கே.சண்முகத்தின் நாடகக் குழுவில் நடித்த என்.எஸ். கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி. சகஸ்ரநாமம், ஏ.பி.நாகராஜன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, ஆர்.எம்.வீரப்பன், “பிரண்ட்” ராமசாமி, எம். ஆர்.சாமிநாதன், டி.கே.ராமச்சந்திரன், எம்.என்.ராஜம், எம்.எஸ். திரவுபதி, டி.ஏ.ஜெயலட்சுமி ஆகியோர் பின்னர் திரை உலகில் நுழைந்து மிகவும் புகழ் பெற்றனர்.
டி.கே.எஸ். சகோதரர்கள் இந்தியாவில் டெல்லி, மும்பை, கல்கத்தா, நாகபுரி, பெங்களூர், திருவனந்தபுரம் முதலான நகரங்களிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளிலும் நாடகங்கள் நடத்தியுள்ளனர்.
தமிழக முதல்- அமைச்சராகப் பேரறிஞர் அண்ணா பதவி வகித்தபோது 1968-ல் டி.கே.சண்முகத்தை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமித்தார். 1971-ல் இவருக்கு “பத்மஸ்ரீ” பட்டத்தை ஜனாதிபதி வழங்கினார்.
“முத்தமிழ் கலா வித்வரத்னம்” என்ற பட்டம் பெற்ற சண்முகம் “எனது நாடக வாழக்கை” என்ற நூலை எழுதியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர் நிகழ்த்திய ஆராய்ச்சி சொற்பொழிவு “நாடகக்கலை” என்ற பெயரில் தொகுக்கப்பட்டு, 1972-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் “பி.ஏ.”, “பி.எஸ்.சி.” வகுப்பு களுக்குத் துணைப்பாட நூலாக வைக்கப்பட்டது.
சிலம்புச்செல்வர் ம.பொ.சி. யிடம் மிகவும் பற்று கொண்ட சண்முகம், அவர் நடத்திய மொழிப் போராட்டங்களில் பங்கு கொண்டார். டி.கே.சண்முகத்தின் திருமணம் 4-7-1941-ல் நடந்தது. மனைவி மீனாட்சி 2-11-1943-ல் ஈரோட்டில் காலமானார். பின்னர் 4-6-1948-ல் சீதாலட்சுமியைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.
சண்முகம் -சீதாலட்சுமி தம்பதிகளுக்கு கலைவாணன், புகழேந்தி, அருள்மொழி, பூங்குன்றன் என்ற 4 மகன்களும், மனோன்மணி என்ற மகளும் உள்ளனர். தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட டி.கே.சண்முகம், 1973 பிப்ரவரி 15-ஆம் தேதி காலமானார்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் சுப்பிரமணிய சிவாவாக ரி.கே.சண்முகம்
ImageImage

நன்றி:-http://cinema.maalaimalar.com/

Leave a comment