Alangudi Somu [Poet, Lyricist, Film Producer]

ஆலங்குடி சோமு [பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர்]

தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக் காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு.

1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் திகதியன்று பிறந்தவர். திரைக்கதை எழுதவேண்டுமென்ற ஆவலோடு திரையுலகை நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த தேவர் இப்படத்திற்குப் பாடல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆலங்குடி சோமு எழுதிய முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பளை அவசியந்தான்’’ என்ற பாடல். இஃது ஓர் நகைச்சுவைப் பாடல். படத்தில் இப்பாடல் காட்சியில் நகைச்சுவைச் செம்மல் குலதெய்வம் ராஜகோபாலும் மனோரமாவும் நடித்திருந்தனர். பாடலும் வெற்றியைப் பெற்றது.

1961-இல் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ படத்துக்காக ’கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்’, 1963-இல் ‘கலையரசி’ படத்தில் ’நீல வானப் பந்தலில்’, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் ‘அவனியெல்லாம் புகழ் மணக்கும் அம்மன் அருள்’, பி.பானுமதி பாடிய ’மயங்காத மனம் யாவும் மயங்கும்’ போன்ற பாடல்கள் ஆலங்குடியாரின் பிரபலமான பாடல்களாகும்.

1964-ஆம் ஆண்டு இரண்டு படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவை ‘தொழிலாளி’, ‘தெய்வத்தாய்’. ‘தொழிலாளி’ படத்தில் ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ என்ற பாடல் பொதுவுடமை, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவற்றை அழகாக எழிய தமிழில் எடுத்துக் கூறிய பாடல். சோமு எம்.ஜி.ஆருக்காக எழுதிய முதல் பாடலும் இதுதான்.

1965-ஆம் ஆண்டு 10 படங்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. ‘இரவும் பகலும்’, ’எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒரு விரல்’, ‘கார்த்திகை தீபம்’, ‘எங்க வீட்டுப் பெண்’, ’பூஜைக்கு வந்த மலர்’, ‘நாணல்’, ’நீர்க்குமிழி’, ‘விளக்கேற்றியள்’ என்பவை அந்த பத்தில் அடக்கம். ‘இரவும் பகலும்’ படத்தில் ஆறு பாடல்களை எழுதினார். நடிகர் எஸ்.ஏ.அசோகன் பாடிய ஒரே பாடலான ‘இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்’, ரி.எம்.எஸ்.பாடிய ‘இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்’ பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றப் பாடல்களாகும். இதே ஆண்டில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’க்காக இவர் எழுதிய எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினருடன் பாடிய கண்களும் காவடிச் சிந்தாகட்டும், காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்’ என்ற பாடலை எழுதித்தரும்படி கேட்டவுடன் ஏழே நிமிடங்களில் எழுதிக்கொடுத்தார் ஆலங்குடி சோமு. எம்.ஜி.ஆரிடம் ஆலங்குடி சோமுவை அறிமுகப்படுத்தியவர் நடிகர் எஸ்.ஏ.அசோகன். இதே படத்தில் வரும் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ’மலருக்குத் தென்றல் பகையானால்’ பாடலும் இவர் எழுதியதே.

1968-இல் வெளிவந்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ என்ற ரி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடலைக் கேட்டு ரசிக்காத உள்ளங்கள் இல்லையெனலாம். இப்படத்தின் பாடல்களை நான்கு கவிஞர்கள் எழுதினார்கள். திரையில் இந்தப் படத்தின் தலைப்புப் பட்டியலில் [டைற்றில்] ஆலங்குடி சோமுவின் பெயரும் இடம்பெற்றிருக்கும். இசைத்தட்டில் இந்தப் பாடல் கவிஞர் வாலி எழுதியதாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இணையதளங்களிலும், கவிஞர்களின் பாடல் பட்டியல்களிலும் ஆலங்குடி சோமு என்பதாகத்தானிருக்கும். இதே படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை’ என்ற பாடலும் இவர் எழுதியதுதான்.

1966-இல் ஆறு படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். ‘காதல் படுத்தும் பாடு’, ‘சாது மிரண்டால்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘செல்வம்’, ‘தேன் மழை’, ‘நான் ஆணையிட்டால்’ ஆகிய படங்களே அவை. 1967-இல் ‘காவல்காரன்’, ‘அரசகட்டளை’, ‘பக்தப்ரஹலாதா’ போன்ற படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதினார். ரி.எம்.எஸ். பாடிய ‘அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்’ என்ற பாடல் மிக மிகப் பிரபலமானது. இதே படத்தில் மற்றொரு பாடல் ‘கட்டழகுத் தங்க மகள் திருநாளோ, அவள் கிட்டே வந்து கட்டி முத்தம் தருவாளோ’ என்ற பாடலும் மிகப் பிரசித்தம் பெற்றது. 1968-இல் ‘கணவன்’, ‘கண்ணன் என் காதலன்’, ’காதல் வாகனம்’, ‘சத்தியம் தவறாதே’, ‘தெய்வீக உறவு’, ‘பொம்மலாட்டம்’ படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். ‘பொம்மலாட்டம்’ படத்தில் சுசீலா பாடிய ‘மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி’, பாடல் ரசிகர்களை மயங்கச்செய்தது.

1969-இல் ‘அடிமைப்பெண்’, ‘அத்தை மகள்’, ’கன்னிப்பெண்’, ‘மனசாட்சி’ ஆகிய படங்களுக்கு எழுதினார். 1970-இல் ‘பத்தாம் பசலி’, ‘சொர்க்கம்’, 1971-இல் ‘குமரிக்கோட்டம்’ என்ற ஒரேயொரு படம். 1972-இல் ‘உனக்கும் எனக்கும்’, ‘வரவேற்பு’, ‘திருமலை தெய்வம்’ என்ற 3 படங்களுக்கு எட்டு பாடல்கள் எழுதினார். 1973-இல் ‘பொன் வண்டு’ என்ற ஒரே படம். 1974-இல் ‘இதயம் பார்க்கிறது’, ‘தாய் பிறந்தாள்’, ‘திருமாங்கல்யம்’ ஆகிய படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. 1975-இல் ‘பணம் பெண் பாசம்’, 1976-இல் ’ஆசை 60 நாள்’, 1977-இல் ’மழை மேகம்’, ’16 வயதினிலே’, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ ஆகிய 3 படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

1960 தொடங்கி, 1997 வரை 35 ஆண்டுகளில் எண்பது படங்களுக்கு 170 பாடல்கள் எழுதியுள்ளார் ஆலங்குடி சோமு. இவர் கடைசியாக எழுதியது ‘பொற்காலம்’ படத்திற்கு எழுதியது 1997-இல் வெளிவந்தது. பிற்காலத்தில் பாரிஸவாத நோயினால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.

இவர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நாகேஷ், ஜெமினிகணேஷ், ராஜஸ்ரீ, பேபி ராஜி, வசந்தா, விஜயலலிதா நடித்த ‘பத்தாம் பசலி’ என்ற படத்தையும், ஜெய்சங்கர், ஜெயகௌசல்யா, ஜே.பி.சந்திரபாபு, சுருளிராஜன், மனோகர், ஏ.சகுந்தலா, ரமாபிரபா, ஜஸ்டின் நடித்த ‘வரவேற்பு’ என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவ்விரு படங்களும் வெற்றி பெறவில்லை. ஆனால் பத்தாம் பசலியில் இடம் பெற்ற ‘அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது’, ‘வெள்ளை மனம் கொண்ட பிள்ளையொண்ணு’, ’போடா பழகட்டும் ஜோடி’, ‘பத்தாம் பசலி மாமா…. மாமோய், அந்தப் பாடம் படிக்கலாமா’ ஆகிய பாடல்கள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அது போல ‘வரவேற்பு’ படத்தில் இடம்பெற்ற ‘பொன் வண்ண மாலையில் நீ தொடும்போது’, ‘வரவேண்டும் மகராஜா தரவேண்டும் புதுரோஜா’, ‘ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்’ ஆகிய பாடல்களும் அன்றைய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும்.

1973-74-ஆம் ஆண்டில் இவருக்கு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இலங்கை வானொலி, வர்த்தக சேவையின் ‘இன்னிசைச் சுவடுகள்’ நிகழ்ச்சியிலிருந்தும், இணையதளத்திலிருந்தும் இத்தகவல்கள் பெறப்பட்டன.

‘Pathaam Pasali’ 1970 Title Card

“Yaanaippaagan’ 1960 Title CardYaanaippaagan 1960-

 

 

10 comments on “Alangudi Somu [Poet, Lyricist, Film Producer]

  1. தாயில்லாமல் நானில்லை – கவிஞர் ஆலங்குடி சோமு

    தாயின் காலடியில் உள்ளதடா சொர்க்கம் என்று நபிகள் நாயகம் கூறுகிறார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறது நன்னெறி! தாய் எந்த உயிருக்கும் ஆதாரமானவள்! தாயை வணங்குதல் தரணியில் சிறந்ததென சான்றோர் முதலாய் சரித்திரம் சொல்லும்! தாய்க்கு ஈடாக இவ்வுலகில் ஏதும் கிடையாது என்பதும் யாவரும் அறிந்ததே!

    அன்பு, கருணை, பரிவு, பாசம் இவைகளின் மொத்தப்படைப்பு தாய்மை! ‘அவள் அன்னை மட்டுமல்ல! வாழ்வின் ஆதாரம்! கடவுள் ஒவ்வொரு உயிருடனும் இணைந்திருக்க இயலாத காரணத்தால் ‘தாயை’ படைத்தான் இறைவன் என்பார்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தாயன்பு மிக்கவராய் வாழ்ந்தார் என்பது மட்டுமின்றி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ‘தாய்’என்கிற உறவுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்து தனது கோடான கோடி ரசிகர்களின் இதயங்களிலெல்லாம் தாய் மீது பாசம் மேலிட காரணமானார் என்பதுவும் மிகையில்லை!

    எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அடிமைப் பெண், கே. சங்கர் இயக்கத்தில் வெற்றிப் படைப்பாக வரலாற்றுப் பின்னணியில் வரையப்பட்ட கதை, திரைக்கதையில் முதல் பாடல் தாயைப் பற்றி அமைய வேண்டுமென எண்ணி பல்வேறு பாடலாசிரியர்களை வரவழைத்து எழுதிப்பெற்றார். வரையப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் வழக்கம்போலவே அதற்கான பணத்தை அள்ளித்தந்தார். ஆனாலும் தான் திருப்தியடைகிற அளவு பாடல் வரப்பெறாமல் மேலும் மேலும் கவிஞர்களை எழுத வைத்தார். 40 பாடல்கள் எழுதப்பெற்ற பின் 41வது பாடலாக கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதிய இப்பாடல் வரிகளில் ஒரு தெய்வ தரிசனம் கண்டார். அதையே படத்தில் இடம் பெறச் செய்தார்.

    தாயில்லாமல் நான் இல்லை
    தானேஎவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)

    ·
    ஜீவநதியாய் வருவாள்
    என்தாகம் தீர்த்து மகிழ்வாள்
    தவறினை பொறுப்பாள்
    தர்மத்தை வளர்ப்பாள்
    தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தாயில்லாமல்)தூயநிலமாய் கிடப்பாள்
    தன்தோளில் என்னைசுமப்பாள்
    தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
    தாய்மையிலேமனம்கனிந்திடுவாள் (தாயில்லாமல்)மேகவீதியில் நடப்பாள்
    உயிர்மூச்சினிலே கலந்திருப்பாள்
    மலைமுடி தொடுவாள்
    மலர்மணம் தருவாள்
    மங்கலவாழ்வுக்கு துணைஇருப்பாள்
    மலர்மணம்தருவாள் (தாயில்லாமல்)
    ஆதிஅந்தமும் அவள்தான்
    நம்மை ஆளும் நீதியும் அவள்தான்
    அகந்தையை அழிப்பாள் ஆற்றலைகொடுப்பாள்
    அவள்தான் அன்னை மகாசக்தி(தாயில்லாமல்)

    அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
    தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள்
    தாயில்லாமல் நான்இல்லை

    திரைக்கதையின்படி, தன்னைப் பெற்ற தாயை முதன் முறையாகப் பார்க்கச் செல்லும் காட்சி! அத் தாயின் காலில் அடிமை விலங்கு பிணைக்கப்பட்டிருக்கிறது! அதை அகற்றும் முயற்சியில் தனயன் ஈடுபட, தாயோ.. இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு அவர்களின் கால்களில் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது.. அவைகளை எல்லாம் அகற்றிவிட்டு கடைசியாக உன் அன்னையின் விலங்கை அகற்ற வா மகனே.. என்று ஆணையிடுகிறார்.

    அம்மாவின் காலடியில் ஆசிபெற்று மகன் தன் கடமையாற்றப் புறப்படுகிற உணர்ச்சிகரமான கட்டம்! உயிரூட்டும் பாடல் வரிகள் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஓங்கார நாதத்துடன் பாடிட டி.எம்.செளந்திரராஜன்!

    திரையில் ஐந்து வடிவங்களாய் தோன்றும் எங்கள் எம்.ஜி.ஆர்.. அங்கே அன்னையின் முகம் விண்ணில் தோன்றி வாழ்த்துச் சொல்ல.. தாயைப் போற்றி.. அவள் சக்தியை எடுத்துரைக்க.. இந்த ஒற்றைப்பாடலுக்கு சக்தி உண்டு என்று எந்த சபையிலும் என்னால் கூற முடியும்!

    எம்.ஜி.ஆர் பாடல்களில் இந்தப்பாடல்.. தாய்க்காக தனயன் முழக்கும் ராஜபாட்டை!

  2. பதினாறு வயதினிலே திரைப்படத்தில்

    ‘மஞ்சக் குளிச்சி அள்ளி முடிச்சி மெட்டி ஒலிக்க மெல்லச் சிரிச்சி எஞ்சோட்டுப் பொண்ணுகளே இளம் வாழைத் தண்டுகளே வாழைக் குருத்துகளே மாமன் மச்சான் தேடிப்புடிங்க…”

    என்னும் பாடலைப் பார்த்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். ஒரு பாடலை எவ்வளவு கதைச்செறிவோடும் உணர்வுத்தன்மையோடும் ஆக்கி அளிக்க முடியும் என்பதற்கு இப்பாடல் நல்ல சான்று. இப்பாடலை எழுதியவர் ஆலங்குடி சோமு. பாடல் வரிகள் நாட்டுப்புறத் தன்மையோடும் மஞ்சள் நீரூற்று விழாச் சொற்களோடும் கதைச்சூழலைத் தன்னகத்தே கொண்டதாகவும் இருக்கின்றன. நல்ல பல பாடல்களின் இயற்றுநரான ஆலங்குடி சோமு பற்றி பிறிதொரு வாய்ப்பில் விரிவாகக் காண்போம். முதற்பட இயக்குநரான பாரதிராஜா ஆலங்குடியாரிடம் ஒரு பாட்டை எழுதி வாங்கிப் பயன்படுத்தியது வியக்கத்தக்கதே. இதில் இளையராஜாவின் முன்மொழிவு இருக்கக்கூடும். பாட்டு தொடங்குவதற்கு முற்காட்சியில் ஊர்ப்பொலியரான (மைனர்) பரட்டை தம் தோழர்களிடம் மஞ்சள் நீரூற்று விழாவைப் பற்றி உரையாடுகிறார். “நாளைக்கு நம்ம ஊருல யாரும் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையோட நடக்க முடியாது…” “ஏன் ஆடிக் காத்து ஆரம்பிச்சிடுச்சா ?” “ஏய்… மஞ்சத்தண்ணீ ஊத்தறேன்னு நம்ம ஊருக் குமரிப் பொண்ணுங்க நம்மளச் சும்மா விடமாட்டாளுங்கடா…” அடுத்த சட்டகத்தில் பாட்டு தொடங்கும். ஊர்ப் பெண்டிர் பெரிய பெரிய வெண்கலப் போகிணிகளில் தண்ணீரை ஊற்றி மஞ்சட்பொடியிட்டுக் கலக்கிக்கொண்டிருப்பார்கள். மஞ்சள் நீராட்டுவதற்கு ஆள் குளிப்பதற்கு ஆகும் நீரைவிட மிகுதண்ணீர் வேண்டும். அத்தண்ணீரில் மஞ்சள் கரைத்து மாமன் மச்சினர்கள்மீது ஊற்றிவிடுவார்கள். ஊர்த்திருவிழாக்களில் மஞ்சள் நீரூற்று நடக்கும் மூன்றாம் நாளை நான் நன்கறிவேன். ஊரே ஓடிக்கொண்டிருக்கும். அன்றைக்கென்று பார்த்து நல்ல சட்டை வேட்டியாகத்தான் அணிந்திருப்பார்கள். மஞ்சளூற்றுவார்களே என்று கந்தலை அணிய மாட்டார்கள். உடுப்பில் மஞ்சள் கறை படுவது ஆண்மைக்குப் பெருமை. உன் பெண்மை என் ஆண்மையை ஏற்றுக் கொண்டாடுகிறது என்பதற்குச் சான்று. தன்னை விரட்டிய ஆண்மகனை தானும் உரிமையோடு விரட்டும் களிநய விளையாட்டு. படக்காட்சியில் ஊரில் திரியும் ஆண்கள் அனைவர்மீதும் மஞ்சள் நீர் ஊற்றப்படும். கன்னியரும் குமரியரும் வெண்கலச் செம்பில் நீர்மொண்டு தப்பி ஓடிச்செல்லும் ஆடவரைத் துரத்திப் பிடித்து தலைநனைய நீரூற்றிவிடுவார்கள். அவ்வூரின் அழகு மயில்மீது தான்கொண்ட பெருங்காதலால் வாழ்ந்திருப்பவன் சப்பாணி. அவளோ சப்பாணியை ஒரு

    பொருட்டாகவே கருதவில்லை. ஊர் மன்றத்திடையே மஞ்சள் நீரூற்று விழா நடக்கிறது. ஒவ்வொருவரும் தமக்குரிய ஆண்மகனைத் தேடிப்பிடித்து மஞ்சள் நீரூற்றுகிறார்கள். ‘பொன்னையா மாசம் என்னையா ?’ என்ற வரியின்போது சற்றே முதியவரும் வயிறு தள்ளிய தோற்றத்தினருமான ஒருவர்மீதும் மஞ்சள் நீர் ஊற்றப்படுகிறது. ஒல்லி ஒடுக்கமான ஓர் இளைஞரைக்கூடத் தேடி அமுக்கி நீரூற்றுகிறார்கள். படத்தில் அவ்வொல்லியரான தோற்றத்தில் இளவயது பாக்யராஜ் தோன்றுகிறார். எவள்மீதும் காதல் என்னும் உயர்வழி அன்பைச் செலுத்தத் தெரியாத முரட்டுப் பொலியரான பரட்டைக்கும் மஞ்சள் நீரூற்று நடக்கிறது. பரட்டையைப் போன்ற ஒருவனுக்கு அடிப்பொடியாக வாழும் கௌண்டமணிக்கும் வேட்டி அவிழ்ந்து தவிக்குமளவுக்கு நீரூற்றுவார்கள். படத்தின் எழுத்தோட்டத்தில் கௌண்டமணி என்றே பாரதிராஜா பயன்படுத்தியிருக்கிறார்.

    அங்கே நல்ல சட்டையும் வேட்டியும் அணிந்துகொண்டு நீரூற்றுக்கு அணியமாக நின்றுகொண்டிருக்கும் சப்பாணியை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். அவனுக்கோ மயில் பெண்ணாள் தன்னை மதித்து நீரூற்ற வரமாட்டாளா என்ற ஏக்கம். அவள் தெளித்துவிடும் மஞ்சள் தண்ணீரால் இப்பிறவி முழுமைக்குமான தாகவிடாய் தீர்க்கும் தவிப்பில் சப்பாணி அலைபாய்கிறான். மயிலாளுக்கோ அவ்வூருக்குப் புதிதாக வந்த மருத்துவனின் கண்வலைக்குள் சிக்கிக்கொண்ட தவிப்பு. ஊர்க்கிழவிகளாக குருவம்மாளும் வெள்ளையம்மாளும் இக்கொண்டாட்ட அலர்ப்பறைகளைக் கண்டு சிரித்துக்கொள்கின்றனர். ஒரேயொரு பாட்டில் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களையும் நிறுத்தி, ஓரிரண்டு சுடுவுகளில் அவரவர்களுடைய குணப்பாங்குகளைக் காட்டி, அடுத்து வரும் காட்சித் தொடர்களுக்கு வேண்டிய அசைவுகளை ஏற்படுத்தி இயக்கியிருப்பார் இயக்குநர். ஒரு கட்டத்திற்கு மேல் சப்பாணியே தன் சட்டை முனையைத் தூக்கிக்கொண்டு மஞ்சள் நீர்ச்செம்புகளோடு இருக்கும் பெண்டிரிடம் தனக்கும் நீரூற்றுமாறு செல்வான். ஆனால், அவர்கள் அவனுக்கு ஊற்றுவதுபோல் பாவனை செய்வார்களேயன்றி, ஒரு சொட்டு நீரைக்கூட ஊற்றமாட்டார்கள். ‘இந்தச் சப்பாணிக்கும் சபலம் பாருங்க…’ என்று எள்ளலாகச் சிரிப்பார்கள். அவர்கள் பார்வையில் அவன் ஆணாகவே இல்லை. மயில்மீது கொண்ட காதல் சப்பாணியின் மூச்சுக் காற்றாயிற்றே. அந்தக் களேபரத்திலும் அவனுடைய கற்பனை அவளை அரசியாக்கிக் காணும். பாட்டின் தாள நடையை இளையராஜா அங்கே நிறுத்துகிறார்.

    அழகப்பா அழகப்பா ஆணழகன் நீயப்பா… மஞ்சக் குளிச்சி அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்லச் சிரிச்சு பொன்னில் குடமெடுத்து வண்ண நீரெடுத்து என்னாசைக் கண்ணனுக்கு எண்ணம்போல நீராட்டுவேன்…! தோழியர் புடைசூழ நடுநாயகியாய் இடைமீது ஏந்திய செம்பில் மாவிலையும் மஞ்சள் நீரும் ததும்ப சப்பாணியின் உச்சிகுளிர நீரை ஊற்றுகிறாள். சப்பாணி தலையை உதறிக்கொள்ளும்போது அது வெறும் கனவு என்று அவனுக்குப் புலப்படும். அவனைப் பார்த்து மயிலும் சிரிக்க சப்பாணி தலை கவிழ்வான். ஒரு பாடலென்பது இப்படித்தான் கதையைக் கட்டியிழுத்து அமைய வேண்டும். பாத்திரங்களின் உணர்வுச் சுழல் பார்வையாளர்களிடம் இரக்கக் குமிழிகளைப் பெருக்க வேண்டும். அழிந்துகொண்டிருக்கும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் அடுத்த தலைமுறைக்கு வெறும் கதையாகப் போகலாம். திருக்குறளில் இடம்பெறும் மடலூர்தல் நமக்குத் தெரியாமல் போயிற்றே, அதைப்போல. அப்போது இதைப்போன்ற பாடல் பதிவுகள்தாம் காட்சிச் சான்றுகளாக இருக்கும்.

  3. kalyani
    gkal2729@gmail.com
    125.17.212.50
    ஆலங்குடி சோமு பாடல் வரிகளில் அழகான உவமைகளை எளிமையாகக் கையாண்டு இருப்பார். “தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை கண்டவர் யார் ” என்று ஒரு பாடலில் அற்புதமாக கேள்வி எழுப்பி இருப்பார். ஆனால் பின்னாட்களில் திரு இராஜேந்தர் இதே வரிகளைக் கையாண்டு தன சொந்த சரக்கு என்று பீற்றிக் கொண்டார்.

  4. kalyani
    gkal2729@gmail.com
    125.17.212.50
    ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
    அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

    From kanchi thalaivan one of the good songs

  5. kalyani
    gkal2729@gmail.com
    125.17.212.50
    ஆலங்குடி சோமு பாடல் வரிகளில் அழகான உவமைகளை எளிமையாகக் கையாண்டு இருப்பார். “தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை கண்டவர் யார் ” என்று ஒரு பாடலில் அற்புதமாக கேள்வி எழுப்பி இருப்பார். ஆனால் பின்னாட்களில் திரு இராஜேந்தர் இதே வரிகளைக் கையாண்டு தன சொந்த சரக்கு என்று பீற்றிக் கொண்டார்
    From kanchi thalaivan one of the best annan thangai song
    ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
    அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

  6. kalyani
    gkal2729@gmail.com
    125.17.212.50
    சொர்க்கம் படத்தில் ஆலங்குடி சோமு எழுதிய பொன் மகள் வந்தாள் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்) பாடலில் பொன்மழை நெடி

    பொன் மகள் வந்தாள்

    பொருள் கோடி தந்தாள்

    பூமேடை வாசல் பொங்கும் தேனாக

    முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்

    தித்திக்கும் நினைப்பை விதைக்கும் பாவை நீ வா

    வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்

    செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்

    வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக

    திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்

    பொன், முத்து, வைரம், செல்வம், வெல்வெட் விரிப்பு, பொருள் கோடி என்று ஒரு லிஸ்ட் போடுகிறார். திருமகள் சம்மதம் தந்துவிட்டாள் என்கிறார்.

  7. தமிழில் பேபி ராஜி.இதே படம் தெலுங்கில் சட்டேகலாபு சட்டேயா [1969] என்ற பெயரில் சாரதாவின் முன்னாள் கணவர் சலம் [ரமண சலம்] மற்றும் பேபி ராஜிவின் பாத்திரத்தில் ரோஜா ரமணியும் நடித்திருப்பர். தமிழில் சற்று அதிகப்படியான சோகம் இழையோடியதால் படம் அடி வாங்கியதென நம்புகிறேன். தமிழில் வி.குமார்-ஆலங்குடி சோமுவின் இணையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. ஆனால் தெலுங்கில் அந்த அளவிற்குப் பாடல்கள் எடுபடவில்லை. ஆனால் சலம் அவர்களின் நடிப்பு மிக மிக அருமையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

  8. எனக்கு பிடித்த பாடல் ஆசிரியர் ஆலங்குடி சோமு . ஆலங்குடி சிவகங்கை மாவட்டம் என்பதை தங்களின் இணையதளம் வாயிலாக தெரிந்துகொண்டதற்கு நன்றி

    அன்புடன்
    சிவசண்முகம் கரூர்

Leave a comment