R.Govardhanam [Music Director]

ஆர்.கோவர்த்தனம் [இசையமைப்பாளர்]

தன்னுடைய இசை அறிவாலும் உழைப்பாலும், திரையுலகில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக செல்வாக்கும் செல்வமும் பெற்றவர். எவ்வளவு வயதானாலும் பிறருடைய ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட விரும்பாதவர். இவருடைய மூத்த சகோதரர் ஏவி.எம்.மின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம்.

இவரது தந்தை ராமச்சந்திர செட்டியார். சங்கீதம் அறிந்தவர். அவரே கோவர்த்தனுக்கு வர்ணங்களையும், கீர்த்தனைகளையும் சொல்லிக்கொடுத்தார். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் கோவர்த்தனம். பெங்களூருவில் வசித்ததால் கன்னடமும் நன்கு தெரியும். இந்த மூன்று மொழிகளிலிருந்த பரிச்சயம், கோவர்த்தனத்தின் முதல் பட வாய்ப்பிலேயே கை கொடுத்தது.

இவர் முதன்முதலாக இசையமைத்த “ஜாதகம்’’என்ற படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இசையமைக்கும் அரிய வாய்ப்பு கோவர்த்தனத்திற்குக் கிடைத்தது. கோவர்த்தனத்தின் இசையமைப்பில்தான் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் தமிழிலே அறிமுகமானார்.

ஏவி.எம்.மில் தலைமை மேலாளராக இருந்த வாசு மேனன் தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளராகி, ‘ஒரே வழி’ என்ற படத்தை எடுத்தார். கதை, வசனத்திற்கு ஜாவர் சீதாராமன், பாடல்களுக்கு கண்ணதாசன், கேமராவிற்கு தம்பு, இயக்கத்திற்கு கே.சங்கர் என்று தேர்ந்தெடுத்த வாசுமேனன் இசைக்குக் கோவர்த்தனத்தை நியமித்தார். இப்படத்தில்தான் ‘அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம்’ என்ற சுசீலாவின் அற்புதமான பாடலும், ரி.எம்.சௌந்தரராஜன், எஸ்.சி.கிருஷ்ணன் இணைந்து பாடிய ‘பணநாதா இன்ப குணநாதா, உலகைப் பம்பரமாய் ஆட்டி வைக்கும் அருள் நாதா என்ற அற்புதமான பாடலும் இடம்பெற்றது. இன்றும் விரும்பிக் கேட்கும் பாடலாக இப்பாடல்கள் விளங்குகிறது.

இதே வாசுமேனன் 1960-இல் இரண்டாவதாக “கைராசி” படத்தை எடுத்தார். இந்தப் படம் வெளிவந்தபோது, அதற்குப் போட்டியாக எம்.ஜி.ஆரின் ‘மன்னாதி மன்னன்’ படமும் சிவாஜி நடித்த ‘பெற்ற மனம்’ படமும் பணமுள்ள தயாரிப்பாளர்களின் படைப்புக்களாக வெளிவந்தன. ஆனால் அவற்றை முறியடித்து, ‘கைராசி’ வெற்றியடைந்தது. அதற்கு முக்கியமான ஒரு காரணம் கோவர்த்தனம் வழங்கிய இசை. ‘காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன்’ , ‘காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே’ , ‘கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ’ , ‘அன்புள்ள அத்தான் வணக்கம்’ போன்ற இனிமையான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

1967-இல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப்படமான ‘பட்டணத்தில் பூதம்’ திரைப்படம் கோவர்த்தனத்தின் சிறந்த இசையமைப்பிற்கு ஓர் அற்புதமான சான்று. இது கண்ணதாசன் ஆரம்பித்த படம். அவர் மூலம் பின்னர் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்தது. கண்ணதாசனின் சிபாரிசின் பேரில் கோவர்த்தனம் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். கண்ணதாசனின் தெரிவு மிகச் சரியானதே என்பதே ஒவ்வொரு பாடலிலும் ஊர்ஜிதப்படுத்தினார் கோவர்த்தனம். இப்படத்தில் ‘உலகத்தில் சிறந்தது எது”, ‘கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா’’, ‘சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றன.

இதற்கடுத்து இவர் இசையமைத்த மற்றொரு சித்திரம் ‘பூவும் பொட்டும்’ 1968-இல் வெளிவந்தது. இதில் ‘நாதஸ்வர ஓசையிலே’, ‘உன்னழகைக் கண்டுகொண்டால்’ போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றன.

இதையடுத்து இவரது அற்புதமான இசையில் வெளிவந்த படங்கள் ‘பொற்சிலை’,இப்படத்தில் ‘அழகைப் பாட வந்தேன் தமிழில் வார்த்தையில்லை’’ என்ற இனிமையான பாடல் மற்றும் பி.சுசீலாவின் குரலில் உருவான ‘அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க என்ற பாடலுடன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய நாளை பொழுது உந்தன் நல்ல பொழுது என்ற தத்துவப்பாடலும் இடம்பெற்றுள்ளது. ‘அஞ்சல் பெட்டி 520’ இப்படத்தில் ரி.எம்.எஸ்., சுசீலா  பாடிய சந்தன சிலையே கோபமா, ஆதிமனிதன் காதல் புரிந்தான் ஆடை அணிந்தா என்ற எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலுடன் ரி.எம்.எஸ்., எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பத்துப் பதினாறு முத்தம் முத்தம், திருமகள் என்வீட்டைத்தேடி வந்தாள் என்ற சுசீலா பாடிய இனிய பாடலும் இடம்பெற்றுள்ளது. தெலுங்கிலும், கன்னடத்திலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் போலீஸ்காரன் மகள் என்ற படம் ‘கான்ஸ்டபிள் கூதுரு’ என்ற பெயரில் வெளிவந்தது. இப்படத்திற்கு இசையமைத்தவர் கோவர்த்தனம். இப்படத்தின் பாடல்களைக் கேட்க: http://www.saavn.com/s/album/telugu/Constable-Koothuru-1963/4vMKVzDQnyc_

ஏவி.எம்.புரொடக்சன்ஸ் தயாரித்த ‘மூகநோமு’ [களத்தூர் கண்ணம்மாவின் தழுவல்] என்ற படத்திற்கும் இசையமைத்தவர் கோவர்த்தனம். இப்படத்தின் பாடல்களைக் கேட்க: http://www.saavn.com/s/album/telugu/Mooga-Nomu-1969/qy5gMAFh5Rs_

தமிழில் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பூவா தலையா’ படம் 1971-இல் தெலுங்கில் பொம்மா பொருசா என்ற பெயரில் வெளிவந்தது. இப்படத்திற்கும்  இசையமைத்தவர் கோவர்த்தனம். அதே போல ‘ராமு’ திரைப்படம் 1966-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியானது. அதற்கும்  இசையமைத்தவர் கோவர்த்தனம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா என பல இசையமைப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் கோவர்த்தனம்.

தற்போது தொண்ணூறு வயதை எட்டவிருக்கும் கோவர்த்தனம் தனது மனைவியுடன் சேலத்தில் வாழ்ந்து வருகிறார்.

தினமலர் நாளிதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.  

R.Govarthanam-2016.

வறுமையில் வாடும் இசைஅமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிரபல இசைஅமைப்பாளர் கோவர்தன், இசைஅமைப்பாளர்களான எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, தேவா என பல புகழ் பெற்ற இசைஅமைப்பாளர்களிடம் உதவி இசைஅமைப்பாளராக பல வருடங்கள் பணியாற்றியவர் ஆவார்.
தற்போது தனது மனைவியுடன் சேலத்தில் வசித்து வரும் 88 வயதான கோவர்தன், தான் எவ்வித வருமானமும் இல்லாமல் வறுமைச்சூழலில் வாழ்ந்து வருவதாகவும், தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கி தங்களைக் காப்பாற்றுமாறும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கோவர்தனின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து கோவர்தனுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த 10 லட்சம் ரூபாய் கோவர்தன் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த வைப்பு நிதியில் இருந்து வட்டியாக மாதந்தோறும் ரூ.8,125 கோவர்தனுக்கு கிடைக்கப்பெறும்.

மேலும், கோவர்தன் செவித்திறன் குறைபாட்டை நீக்கும் வகையில் அவருக்கு அரசு பொது மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளித்து, காதொலிக் கருவி ஒன்றினை வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.maalaimalar.com/News/District/2016/06/08001559/1017334/Rs-10-lakh-assistance-to-the-impoverished-composer.vpf

Govardhan - Wife

12 comments on “R.Govardhanam [Music Director]

  1. In வரப்பிரசாதம் Super hit. Song. கங்கை நதி ஒரம் He composed. Under assistance. Of இளையராஜா.

    • வரப்பிரசாதம் படத்தில் இன்னும் ஒரு பாடல் இருக்கிறது. ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய புது ரோஜாவின் இதழ்களிலே என்ற பாடலும் இனிமையானதுதான்.

  2. வாணி- ஜேசுதாஸ் ஜோடியின் இனிமையான பாடல். 1970-1980 களில் இலங்கை வ னொலியில் . இதைக் கேட்கக் கூடியதாக இருந்தது.

    அருமையான பாடல், வாணி அம்மாவின் குரல் மிக மிக அருமை.

    பாடல்களுக்கு ட்யூன்: கோவர்தனன்
    பாடல்களுக்கு இசைக் கோர்ப்பு: இளையராஜா
    பின்னனி இசைக் கோர்ப்பு: இளையராஜா

    படத்தின் டைட்டில் கார்டில் இசை: கோவர்தனன், உதவி:ராஜா என்று வரும்.

    This song was orchestrated by Ilayaraja who happened to be assisting Mr.Govartanan and happened to be Ilayaraja’s first song.

  3. எம்.எஸ். வி. உதவியாளர் கோவர்த்தனம் காலமானார்

    சேலம் : சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் பழம்பெரும் இசையமைப்பாளர் கோவர்த்தனம்(90). தமிழ்த்திரையுலக பிரபலங்கள் இவரை செல்லமாக ‘ஸ்வரக்குட்டி’ என்று அழைப்பார்கள். பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பணியாற்றிய கோவர்த்தனம், 1953ம் ஆண்டு வெளிவந்த ஜாதகம், கைராசி, பட்டணத்தில் பூதம், பொற்சிலை, அஞ்சல்பெட்டி 520, வரப்பிரசாதம் உள்ளிட்ட 8 படங்களுக்கு தனியாகவும் இசையமைத்துள்ளார். அதன் பின்னர், இளையராஜா, தேவா உள்பட பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார்.

    கடந்த 1992ம் ஆண்டு, இசைப்பயணத்தை முடித்துக் கொண்ட கோவர்த்தனம், சென்னை மயிலாப்பூரில் இருந்து சேலம் மாவட்டம் குகை பகுதிக்கு வந்து மனைவி இந்திரா பாயுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று காலை மரணமடைந்தார். குளித்தலையில், 1928ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிறந்த இவருக்கு மல்லேஸ்வரி, திலகம் என்று இரு மகள்கள் உள்ளனர்.

  4. இச்செய்தி எந்த பத்திரிகையில் வெளிவந்தது திரு.சேதுராமன்? மேலும் ஆர்.கோவர்த்தனம் பிரபலமான இசையமைப்பாளர். தனித்தே பல தமிழ்ப் படங்கள், தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு இசையமைத்தவர். ஆதலால் அவரை இளையராசாவின் உதவியாளர் என்று சொல்லி சிறுமைப்படுத்துவதைவிட பிரபல பழம்பெரும் இசையமைப்பாளர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். மேலும் நீங்கள் எந்த செய்தியை எங்கிருந்து எடுக்கிறீர்கள் என்று அதன் விவரத்தையோ அல்லது அதன் இணைப்பையோ இங்கே பதிவிடவேண்டும். அதுதான் முறை.

  5. தமிழ் திரையுலகிற்கு மறக்க ,முடியாத பாடல்களை வழங்கிய
    பழம்பெரு இசையமைப்பாளர் ஆர்.கோவர்த்தனம் மறைவு!

    (கரிகாலன்)

    தமிழ்த் திரையுலகில் தனது அயராத உழைப்பாலும் திறமையாலும் பல இனிமையானப் பாடல்களை சிருஷ்டித்த பழம்பெரு இசையமைப்பாளர் ஆர்.கோவர்த்தனம் (வயது 90) முதுமை காரணமாக நேற்று தனது இல்லத்தில் காலமானார்.ஒரு காலத்தில் ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கிய ஆர்.சுதர்சனம் இவரின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரில் 1928ஆம் ஆண்டில் பிறந்து வளர்ந்தவரான கோவர்த்தன், இசை ஞானம் கொண்ட தனது தந்தை ராமச்சந்திர செட்டியாரிடம் சிறு வயதிலேயே கீர்த்தனைகளையும் இசை நுணுக்கங்களையும் கற்றுத்
    தேறினார்.தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இவருக்கு கன்னடமும் தமிழும் இளமையிலேயே ஒன்றியதால், மும்மொழியும் அறிந்தவராக இவர் திறமை பெற்றிருந்தார்.

    1953ஆம் ஆண்டில் பிரபல தெலுங்கு நடிகர் ஆர்.நாகேந்திரராவ்
    தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாரித்து இயக்கியதோடு அவரே முக்கிய வேடத்திலும் நடித்திருந்த
    ஆர்.என்.ஆர் பிக்சர்ஸ் ‘ஜாதகம்’ படத்திற்கு கோவர்த்தனம் முதன் முதலாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார்.இப்படத்திற்கு அவர் இசையமைப்பில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடியிருந்த ‘குழலும் யாழ் இசையே’ மற்றும் ‘மாடுகள் மேய்த்திடும் பையன்’ ஆகிய இரண்டு பாடல்கள் மிகவும் பிரபலமாயின.இந்தப் படத்தின் வாயிலாகவே
    பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அறிமுகமானார்.

    ஏ.வி.எம் நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றி வந்த வாசுமேனன் என்பவர் 1959ஆம் ஆண்டில், வாசு பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் பெயரில் ‘ஒரே வழி’ என்ற படத்தை தயாரித்தபோது அதற்கு இசையமைக்கும் பொறுப்பை கோவர்த்தனத்திற்கு வழங்கினார். இப்படத்தில் பி.சுசிலாவின் குரலில் ஒலிக்கும் ‘அன்பும் அறமும் உயர்வெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம்’ என்ற பாடல் புகழ் பெற்றதாகும்.

    பின்னர் வாசுமேனன் தனது இரண்டாவது படைப்பாக 1960ஆம் ஆண்டில் ‘கைராசி’ படத்தை தயாரித்தபோது அதற்கும் கோவர்த்தனே இசையமைத்தார்.இப்படத்தில் ‘அன்புள்ள அத்தான் வணக்கம்’ ,
    ‘காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்’,
    ‘காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே’ மற்றும் ‘கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ’ போன்றப் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.இக்காலக் கட்டத்தில் விஸ்வநாதன்&ராமமூர்த்தி இரட்டையர்களிடம் உதவியாளராகவும் கோவர்த்தன் பணியாற்றினார்.தொடர்ந்து விஸ்வநாதன் தனியாக இசையமைத்தபோது அவருக்கு உதவியாளராக, பலப் படங்களில் கோவர்த்தனம் பணியாற்றினார்.

    1967ஆம் ஆண்டில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற, ‘பட்டணத்தில் பூதம்’ படத்திற்கு கோவர்த்தனம் இசையமைத்திருந்த,
    ‘அந்த சிவகாமி மகனிடன் சேதி சொல்லடி’, ‘உலகத்தில் சிறந்தது எது’, ‘கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா’, நான் யார் யார் என்று சொல்லவில்லை’, எதிர்ப்பாராமல் விருந்தாளி’ மற்றும் இதழை விரித்தது ரோஜா’ போன்றப் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.

    தொடர்ந்து 1968ஆம் ஆண்டில் வெளி வந்த ‘பூவும் பொட்டும்’ படத்தில் ‘நாதஸ்வர ஓசையிலே’,‘எண்ணம்போல கண்ணன் வந்தான்’, உன் அழகைக் கண்டு கொண்டால்’, உலகம் ஒளிமயமே’, ‘முதல் என்பது தொடக்கம்’ போன்றப் பாடல்கள் இவரது இசையில் இனிமையாக ஒலித்தன. இதே ஆண்டில் இவரின் மற்றொரு படைப்பான ‘அஞ்சல் பெட்டி 520’ படத்தில் ’சந்தனச் சிலையே கோபமா’, ‘பத்துப் பதினாறு முத்தம் முத்தம்’ மற்றும் ‘திருமகள் என் வீட்டை தேடி வந்தாள்’ போன்றப் பாடல்கள் பிரபலமாக விளங்கின.

    1969இல் இவரது இசையில் திரையீடு கண்ட ‘பொற்சிலை’ படத்தில், ‘அழகைப் பாட வந்தேன்’ மற்றும் ‘நாளைப் பொழுது உந்தன் நல்லப் பொழுதாகும் என்று நம்பிக்கை கொள்வாயடா’ ஆகியப் பாடல்கள் பிரசித்திப் பெற்றன.இதனைத் தொடர்ந்து கோவர்த்தன் தெலுங்கிலும் கன்னடத்திலும் தயாரிக்கப்பட்ட பலப் படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகவும் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

    1976ஆம் ஆண்டில் ‘வரப்பிரசாதம்’ என்றப் படத்திற்கு இசையமைத்தார்.இப்படத்தில் ‘கங்கை நதியோரம் ராமன் நடந்தான்’ மற்றும் ‘காலங்களே கண் பாருங்கள்’ போன்றப் பாடல்கள் புகழ் பெற்றன.தொடர்ந்து சில ஆண்டுகள் இடைவெளி விட்டு 1981ஆம் ஆண்டில் ‘கடவுளின் தீர்ப்பு’ என்ற படத்திற்கு கோவர்த்தன் இசையமைத்தார்.பின்னர் இளையராஜா, சந்திரபோஸ், விஜயபாஸ்கர் மற்றும் தேவா ஆகிய இசையமைப்பாளர்களிடமும் இணைந்து கோவர்த்தனம் தனது இசைப் பயணத்தை தொடர்ந்தார்.

    கோவர்த்தனம் இசையமைக்கும் வாய்ப்பை இழந்து, அவரின் குடும்பம் வறுமையில் வாடியபோது, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அறக்கட்டளையிலிருந்து அவருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.தொடர்ந்து கோவர்த்தனுக்கு மாதாந்திர படிப் பணம் கிட்டுவதற்கும் ஜெயலலிதா வழியேற்படுத்தி கொடுத்தார்.

    கோவர்த்தனம் சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து தனது மனைவி இந்திரா பாயுடன் சேலத்தில் வசித்து வந்தார்.இந்நிலையில் முதுமை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டார்.அவரது உடல்நிலை மோசமடையவே, நேற்று காலையில் அவர் காலமானார்.இவருக்கு
    மல்லேஸ்வரி மற்றும் திலகம் ஆகியப் பெயர்களில் இரண்டு மகள்கள் உள்ளனர்.கோவர்த்தனம் குறைவானப் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவரின் நிறைவானப் பாடல்கள் என்றென்றும் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

    ( நிறைவு)

  6. கோவர்த்தனம் வரப்பிரசாதம் படத்தில் ‘எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ற பாடலுக்கு இசையமைத்திருந்தார்.காலங்களே கண் பாருங்கள் அல்ல.தவறுக்கு வருந்துகிறேன்.அன்புடன் கரிகாலன்.

Leave a comment