Vindhan [Story,Screenplay, Dialogue Writer,Lyricsist]

விந்தன் [கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர், பாடலாசிரியர்]

செங்கல்பட்டு மாவட்டம், நாகளூர் என்னும் கிராமத்தில் வேதாச்சலம், ஜானகியம்மாள் தம்பதிக்கு 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 22-ஆம் திகதி மூத்த மகனாகப் பிறந்தவர் கோவிந்தன் என்கின்ற விந்தன்.

இவர் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்து, பத்திரிகை அலுவலகங்களில் அச்சு கோர்ப்பாளராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சொந்தமாக ”மனிதன்” என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஓராண்டு காலம் நடத்தினார். “கல்கி” இதழில் உதவி ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றினார். அந்தக் காலத்தில் தான் எழுதவும் ஆரம்பித்தார். ஏழிசை வாரதி எம்.கே.தியாகராஜபாகவதரின் கதையை நூல் வடிவில் பிரசுரித்து வெளியிட்டார். 13 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 8 கட்டுரைத் தொகுதிகள் இவர் எழுதியிருக்கிறார்.

விந்தன் முதன் முதலாக திரைப்படத்துக்கென பாடல் எழுதியது சிவாஜிகணேசன், பத்மினி நடித்து 1953-ஆம் ஆண்டு வெளிவந்த “அன்பு” என்ற படத்துக்காகத் தான். அந்தப் படத்தில் ஒரேயொரு பாடலை எழுதினார் விந்தன். ரி.ஆர்.பாப்பாவின் இசையில் “சுத்தாத இடமில்லே கேட்காத பேரில்லே…… ஒண்ணும் புரியவில்லை தம்பி” என்ற பாடலை எழுதினார். வேலைக்காக அலைந்து திரிந்து விரக்தியாக பாடும் பாடல். ஏ.எம்.ராஜா பாடியது.

1954-ஆம் ஆண்டில் “கூண்டுக்கிளி” படத்துக்காக 3 பாடல்களை எழுதினார் விந்தன். அவை ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய “கொஞ்சும் கிளியான பெண்ணைக் கூண்டுக்கிளி” ரசிக நெஞ்சங்களைக் கொள்ளைகொண்ட பாடல் இது. அடுத்து ராதாஜெயலட்சுமி பாடிய ஓரு உருக்கமான பாடல் “பார் என் மகளே பார் பரந்துகிடக்கும் அன்னை பூமி”, அடுத்து பி.ஏ.பெரிய நாயகி பாடிய ”எனக்குத் தெரியல நெஜமா எனக்குத் தெரியல” நேயர்களின் மனங்களைச் சுண்டியிழுத்தது.

1955-ஆம் ஆண்டு தஞ்சை ராமையாதாஸ் அவர்களின் மேடை நாடகமான “பகடை பன்னிரெண்டு” “குலேபகாவலி” என்ற பெயரில் படமானது. இந்தப் படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்களைத் தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருந்தார். ஒரேயொரு பாடலை விந்தனிடம் கொடுத்து எழுத வைத்தார். அந்தப் பாடல்தான் “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ”. மெல்லிசை மன்னர்களின் மயக்கும் இசையில் ஏ.எம்.ராஜா-ஜிக்கி காதல் தம்பதியர் இப்பாடலைப் பாடினர்.

1958-இல் முரசொலி மாறன் கதை, வசனத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பண்டரிபாய் நடிப்பில் வெளிவந்த “அன்பு எங்கே” படத்திற்காக ஒரு பாடலை எழுதினார் விந்தன். ”சொல்லு நீ ராஜா சொல்லு நீ ராஜா” என்ற பாடலை வேதாவின் இசையில் பாலசரஸ்வதி தேவி அனுபவித்துப் பாடினார். விந்தனின் கடைசிப் பாடல் இடம்பெற்ற படம் தான் “பார்த்திபன் கனவு” எம்.எல்.வசந்தகுமாரி பாடிய“அந்தி மயங்குதடி ஆசைப் பெருகுதடி கந்தன் வரக்காணேனே” என்ற பாடல்.1960-ஆம் ஆண்டு வெளிவந்தது. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மூலக்கதையை விந்தன் அவர்களின் கதை, வசனத்தில் உருவானது இந்தப் படம். இப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா இணைக்காக விந்தன் எழுதிய ”இதய வானின் உதய நிலவே எங்கே போகின்றாய்” என்ற பி.சுசீலா, ராஜா பாடிய காதல் கீதம்.

விந்தன் வசனம் மட்டும் எழுதிய படங்கள் வாழப்பிறந்தவள், மணமாலை, சொல்லு தம்பி சொல்லு, குழந்தைகள் கண்ட குடியரசு உள்ளிட்டவை. 1953 முதல் 1960 வரை ஏழு வருடங்களில் 7 படங்களில் பணியாற்றியுள்ளார் விந்தன். 5 படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவற்றில் இரண்டு படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதினார். அதன் பின்னர் திரையுலகம் அவரை மறந்தேவிட்டது.

1975-ஆம் ஆண்டு தனது 59-ஆவது வயதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் காலமானார். விந்தனின் படைப்புக்களைத் தமிழக அரசு நாட்டுடமையாக்கியது. திரையிசைக்காக எட்டுப் பாடல்களே எழுதினாலும் அவையெட்டும் திரையிசை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பிடித்தப் பாடல்களாகும். விந்தைகள் நிறைந்தது இந்த திரையுலகம். சிந்தை நிறைந்த பாடல்களைத் தந்த விந்தனால் நின்று நிலைக்க முடியவில்லை. அதுதான் விந்தை நிறைந்த திரையுலகம்.

நன்றி:- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவை.

 

4 comments on “Vindhan [Story,Screenplay, Dialogue Writer,Lyricsist]

 1. இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாபனத்தின் தேசிய சேவையில், சனிக் கிழமை தோறும் 4.30 – 5.00 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘இன்னிசை சுவடுகள்’ நிகழ்ச்சியில், வாரம் ஒரு கவிஞர் என்ற முறையில், தொடர்ந்து பல கவிஞர்களைப் பற்றியும் ஒலிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எமது திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள் (தொகுதி – 1), திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள் (தொகுதி – 2) ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஒலிபரப்பப்படுவதாக சில நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர் அறிவித்துள்ளார். அப்படி அறிவிப்பாளர் சொன்ன ஒலிப்பதிவு எம்மிடம் உள்ளது.

  “விந்தன்”

  சிலம்புச் செல்வர் ம.பொ.சி. க்கும் சிறுகதைச் செல்வர் விந்தனுக்கும் ஒற்றுமையுண்டு. இருவருமே தங்கள் எண்ணத்தில் எழுத்துக்களை கோர்த்ததுபோல், அச்சகத்திலும் அழகாக எழுத்து கோர்க்கும் பணியாற்றினார்கள். புதுமைப்பித்தனுக்கும் விந்தனுக்கும் ஒற்றுமையுண்டு. இருவரது எழுத்திலும் எரிச்சலும் எள்ளலும் இருந்தது.

  “விந்தன் – வாழ்க்கை குறிப்பு”

  செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் என்ற கிராமத்தில் வேதாச்சலம் – ஜானகியம்மாள் தம்பதிக்கு 22 – 09 – 1916 இல் மூத்த மகனாகப் பிறந்தார் கோவிந்தன் என்ற விந்தன். கோவிந்தனின் தம்பியின் பெயர் சாமிநாதன். கோவிந்தன் மூன்றாம் பாரம் வரை படித்தார். இவருக்கு நீலாவதி, சரஸ்வதி என்ற இரு மனைவிகள். இந்த இரு தாரத்திலும் 5 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். விந்தனின் மைந்தர் கோ.ஜனார்த்தனன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்றுள்ளார். ஜனார்த்தனன் தமது தந்தையின் பெயரில் ‘விந்தன் அறக்கட்டளை’ ஒன்றை நிறுவியுள்ளார்.

  விந்தன் தனது இளம் வயதிலேயே சென்னை நகருக்கு புலம் பெயர்ந்து, அங்கு; சுதேசமித்திரன், பாரத தேவி, தமிழரசு, ஆனந்த விகடன் – ஆகிய பத்திரிக்கைகளில் அச்சுக் கோர்ப்பு தொழில் (கம்போசிடர்) புரிந்தார். ‘பொன்னி’ என்ற இதழிலும் ‘நக்கீரன்’ என்ற பெயரில் இவர் எழுதியுள்ளார். 1951 இல் கல்கி பத்திரிக்கையிலிருந்து நீங்கிய இவர், ‘மனிதன்’ என்ற இதழை ஓராண்டு காலம் மட்டுமே நடத்தியுள்ளார். மனிதன் இதழில் இவர் எழுதிய ‘தெரு விளக்கு’ என்ற தொடர் சினிமாக்காரர்களை சினம் கொள்ளச் செய்தது. ஜெமினி சினிமா ஸ்தாபனத்தில் விளம்பரப் பிரிவில் சிறிது காலம் பணிபுரிந்தார்.

  பாவேந்தருக்கு தாசனாக உவமைக் கவிஞர் சுரதா இருந்ததைப் போல், கல்கியின் தாசனாக விந்தன் இருந்தார். ‘கல்கி’ பத்திரிக்கையில் பணியாற்றிய பொழுதுதான் இவர் எழுதத் தொடங்கினார். கல்கி பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்தபொழுதுதான் கோவிந்தன் என்ற இவருடைய பெயர் ‘விந்தன்’ என்று மாற்றமடைந்தது. கடவுளுக்கே புரியாத கல்கியின் கையெழுத்தை நன்றாக புரிந்துகொண்டு அழகாக அச்சு கோர்த்தார் விந்தன். கல்கி இதழில் இவர் எழுதிய கதைகள் கல்கி அவர்களால் பாராட்டப்பட்டது.

  ‘மனிதன்’ இதழ் ஓராண்டு வெளியாயிற்று. ஆனால் இவர் தொடங்கிய ‘மல்லிகா புரொடெக் ஷன்ஸ்’ சினிமாக் கம்பனி தொடக்கத்திலேயே நின்றுவிட்டது. இந்நிலையில் ‘புத்தகப் பூங்கா’ என்று ஒரு பதிப்பகத்தை தொடங்கினார். சினிமா எழுத்தாளர் இளங்கோவனின் ‘சாவே வா’ என்ற கட்டுரையை நூலாக வெளியிட்டார். ஜெயகாந்தனின் ‘ஒருபிடி சோறு’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். க.நா.சு., சாண்டில்யன் போன்றவர்களின் படைப்புகளையும் விந்தன் வெளியிட்டார். முதன் முதல் ‘நீர்க் குமிழி’ படத்தை இயக்கிய கே.பாலச்சந்தரின் துணிவையும், முதன் முதல் தமது பதிப்பகத்தில் ‘சாவே வா’ நூலை வெளியிட்ட விந்தனின் துணிவையும் பாராட்டத்தான் வேண்டும்.

  1957 இல் அமுத சுரபி இதழில் ‘அன்பு அலறுகிறது’ என்ற தொடரை விந்தன் எழுதினார். இத்தொடர் தனது சிநேகிதி நாவலைத் தழுவியுள்ளதாக அகிலன் விந்தன் மீது வழக்கு தொடர்ந்தார்.

  சென்னை, மேற்குசேத்துப்பட்டு, கந்தப் பிள்ளைத் தெருவில் வசித்து வந்துள்ளார் விந்தன்.

  மாரடைப்பின் காரணமாக இவர் தனது 59 ஆம் அகவையில் 30 – 06 – 1975 இல் காலமானார்.

  “விந்தனின் சிந்தனையில் உதித்தவை”

  இவருடைய ஆக்கங்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கியுள்ளது. இவரின் சில சிறுகதைகளை தொகுத்து ‘சாகித்ய அகாடமி’ நூலாக வெளியிட்டுள்ளது. விந்தன் எழுதிய ‘பசிகோவிந்தம்’ என்ற நூல், முதறிஞர் இராஜாஜி எழுதிய ‘பஜகோவிந்தம்’ என்ற நூலை பகடி செய்து எழுதப்பட்ட நூலாகும். 1967 இல் ‘தினமணிக் கதிர்’ இதழில் இவர் பணியாற்றிய பொழுது, எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை, ‘பாகவதரின் கதை’ என்ற தலைப்பில் தினமணிக் கதிரில் எழுதினார். பின்பு இது நூல் வடிவம் பெற்றது. எம்.ஆர்.ராதா சிறையிலிருந்த பொழுது ராதாவைச் சந்தித்து ‘சிறைச்சாலை சிந்தனைகள்’ என்ற தொடரை எழுதினார். பின்பு இதுவும் நூல் வடிவம் பெற்றது. பாரதக் கதையை கவிதையில் வடித்து, ‘பாட்டினில் பாரதம்’ என்ற தலைப்பில் தினமணிக் கதிரில் தொடராக எழுதினார்.

  பாரதிக்கு பாஞ்சலி சபதமும், பாவேந்தருக்கு குடும்ப விளக்கும் புகழளித்ததுபோல், விந்தனுக்கு பாலும் பாவையும் புகழளித்தது.

  இவர் பொதுவுடமைச் சிந்தனையைக் கொண்டவராக விளங்கினார். காதல் வர்ணனையில் கூட இவர் பொதுவுடமைக் கருத்துடன் கூடிய புது வர்ணனையைக் கையாண்டார். எடுத்துக்காட்டு -1 ‘அவளைக் கண்டதும் அவனது முகம் மலர்ந்தது. சூரியனைக் கண்ட தாமரையைப் போல் அல்ல, சோற்றைக் கண்ட ஏழையைப் போல’. எடுத்துக் காட்டு – 2 ‘அந்த ரயில் சின்ன சின்ன ரயில்வே ஸ்டேஷன்களிலெல்லாம் நிற்காமல் சென்றது, ஏழையைப் பார்த்ததும் பார்க்காமல் செல்கின்ற பணக்காரனைப் போல’.

  அன்புடன்,
  கவிஞர் பொன். செல்லமுத்து,
  பணி நிறைவு கிராம நிர்வாக அலுவலர்,
  ‘தமிழ் சினிமா ஆவணக் காப்பகம்”

 2. “விந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள்”

  1.முல்லைக் கொடியாள்
  2. ஒரே உரிமை
  3. சமுதாய விரோதி
  4. விந்தன் கதைகள்
  5. முதல் தேதி
  6. நாளை நம்முடையது
  7. இரண்டு ரூபாய்
  8. ஏமாந்துதான் கொடுப்பீர்களா
  9. எங்கள் ஏகாம்பரம்
  10. குட்டிக் கதைகள்
  11. மகிழம்பூ
  12. ஒ மனிதா (உருவகக் கதைகள்)
  13. மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் (உருவகக் கதைகள்)

  “விந்தன் எழுதிய நாவல்கள்”

  1.பாலும் பாவையும்
  2. கண் திறக்குமா
  3. அன்பு அலறுகிறது
  4. மனிதன் மாறவில்லை
  5. காதலும் கல்யாணமும்
  6. சுயம்வரம்

  “விந்தன் எழுதிய கட்டுரைகள்”

  1.வேலை நிறுத்தம் ஏன்
  2. இதோ ஒரு மக்கள் பிரதிநிதி
  3. விந்தன் கட்டுரைகள்
  4. எம்.கே.டி.பகவதரின் கதை
  5. சிறைச்சாலை சிந்தனைகள் (எம்.ஆர்.ராதாவைப் பற்றி)
  6. பசி கோவிந்தம்
  7. ஓ மனிதா
  8. புதிய ஆத்திச்சூடி

  “சினிமாவில் விந்தன் – விந்தன் எழுதிய திரைப் படப்பாடல்கள்”

  இவர் 5 படங்களில் 8 பாடல்களை மட்டுமே எழுதியுள்ளார்.

  1.அன்பு (1953) – ஒண்ணும் புரியவில்லை தம்பி
  2. கூண்டுக்கிளி (1954) – 1. எனக்குத் தெரியலே நெஜமா – பி.ஏ.பெரியநாயகி / 2. பார் என் மகளே பார் – ஆர்.ஜெயலட்சுமி / 3. கொஞ்சுங்கிளியான பெண்ணை – டி.எம்.எஸ்.
  3. குலேபகாவலி (1955) – மயக்கும் மாலைப் பொழுதே – ஏ.எம்.ராஜா, ஜிக்கி
  4. அன்பு எங்கே (1958) – சொல் நீ ராஜா சொல்லு – ஆர்.பாலசரஸ்வதி
  5. பார்த்திபன் கனவு (1960) – 1. இதய வானின் உதய நிலவே – ஏ.எம்.ராஜா, பி.சுசீலா / 2. அந்தி மயங்குதடி ஆசை – எம்.எல்.வசந்தகுமாரி

  டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் உருவான கூண்டுக்கிளி படத்திற்காக கே.வி.மகாதேவன் இசையில் ‘மயக்கும் மாலைப் பொழுதே’ என்ற பாடலை விந்தன் எழுதியிருந்தார். இப்பாடலை அப்படத்தில் நடித்த எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருமே அப்பாடலை தங்களுக்கு வைக்கும்படி இயக்குநரை கேட்டனர். இது ஏன் வம்பு என்று எண்ணிய இயக்குநர் இப்பாடலை கூண்டுக்கிளி படத்தில் சேர்க்கவில்லை. அடுத்து ராமண்ணா தயாரித்த குலேபகாவலி படத்திற்கு மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திருந்தாலும், கே.வி.மகாதேவன் இசையில் உருவான ‘மயக்கும் மாலைப் பொழுதே’ பாடலை குலேபகாவலி படத்தில் சேர்த்துவிட்டார்.

  கூண்டுக்கிளி படத்திற்காக ‘கொஞ்சுங்கிளி யானபெண்ணை’ என்ற பாடலை விந்தன் எழுதினார். சிவாஜி கணேசனுக்காக டி.எம்.எஸ். பாடிய முதல் பாடல் இது. ஜீவா என்பவன் (சிவாஜி) காதலித்த பெண்ணை (பி.எஸ்.சரோஜா), ஜீவாவின் நண்பன் தங்கராஜ் என்பவன் (எம்.ஜி.ஆர்.) மணந்து கொள்கிறான். மணமான தன் காதலியை ஜீவா நாடுவது சரியா தப்பா என்று பாடலில் வினா தொடுக்கிறார் விந்தன்.

  கொஞ்சுங்கிளி / யானபெண்ணை / கூண்டுக்கிளி / யாக்கிவிட்டு / கெட்டிமேளம் / கொட்டுவது / சரியா/ தப்பா
  பஞ்சபூத / சாட்சியெல்லாம் / நெஞ்சமில்லா / சாட்சியென்று / தொட்டுமாலை / சூட்டுவது / சரியா / தப்பா

  எண்சீர்களில் அமைந்த அரிய திரைப் பாடல் இது. கவிஞர் மருதகாசி கூட ‘நான் சொல்லும் ரகசியம்’ படத்தில் எழுசீர்களில்தான் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

  “விந்தன் வசனம் எழுதிய படங்கள்”

  1.அன்பு (1953) – வசனம்
  2. வாழப் பிறந்தவள் (1953) – வசனம்
  3. கூண்டுக்கிளி (1954) – திரைக்கதை, வசனம்
  4. மணமாலை (1958) – வசனம்
  5. சொல்லு தம்பி சொல்லு (1959) – வசனம்
  6. குழந்தைகள் கண்ட குடியரசு (1960) – வசனம்
  7. பார்த்திபன் கனவு (1960) – திரைக்கதை, வசனம்

  < < > >

  அன்புடன்,
  கவிஞர் பொன். செல்லமுத்து,
  பணி நிறைவு கிராம நிர்வாக அலுவலர்,
  ‘தமிழ் சினிமா ஆவணக் காப்பகம்”

 3. “விந்தைகள் நிறைந்த சினிமா சந்தையில், சிந்தைகள் நிறைந்த விந்தனால் உந்தியெழ முடியவில்லை”

  அன்புடன்,
  கவிஞர் பொன். செல்லமுத்து,
  பணி நிறைவு கிராம நிர்வாக அலுவலர்,
  ‘தமிழ் சினிமா ஆவணக் காப்பகம்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s