C.V.Rajendran [Director / Producer]

சி.வி.ராஜேந்திரன் [இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்]

இளமை இயக்குநர் என்றும் இவரைக் குறிப்பிடுவதுண்டு. பிரபல இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். போதிய பயிற்சிக்குப் பின் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு அதில் வெற்றி நடை போட்டவர்.

முத்துராமன், ராஜஸ்ரீ, ரி.எஸ்.பாலையா நடித்த “அனுபவம் புதுமை” என்ற படம்தான் இவரது முதல் படம். இப்படம் 1967-இல் வெளிவந்தது. செங்கல்பட்டின் அருகிலுள்ள ”சித்தமூர்” என்ற சிறிய கிராமமே இவரது சொந்த ஊர். இயக்குநர் ஸ்ரீதருக்கும் இதுவேதான் சொந்த ஊர். ஸ்ரீதர் இவரது அத்தை மகன். இயக்குநராவதற்கு முன் திருவள்ளூரிலுள்ள அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். அரசுத் தேர்வாணையம் நடத்திய தேரிவிலும் கலந்துகொண்டு அதிலும் வெற்றிபெற்றார். இந்த நேரத்தில் வேலைக்கான காலக்கெடு முடிந்துவிட கொஞ்ச நாட்கள் வேலையில்லாமல் இருந்தபோது ஸ்ரீதர் இவரைத் திரைத்துறைக்கு அழைத்தார். பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதிய அனுபவம் மட்டுமே இவருக்குத் தகுதி. எனினும் இதையே தகுதியாக ஏற்றுக்கொண்டு ஸ்ரீதர் இவரைத் தேர்வு செய்திருப்பார் போலும். ஆனால் ஸ்ரீதரின் எதிர்பார்ப்பிற்குக் குந்தகமின்றி பின்னாளில் பெரிய இயக்குநராகிவிட்டார் இவர்.

ஸ்ரீதரிடம் இருந்தபோது “மீண்ட சொர்க்கம்”, “கலைக்கோவில்”, “கொடி மலர்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “நெஞ்சிருக்கும் வரை” போன்ற படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். ”காதலிக்க நேரமில்லை” படத்தின் போது அசோஸியேட் டைரக்டரானார். “அனுபவம் புதுமை” படத்தில் தான் முதன்முதலாக ஸ்லோமோஷன் காட்சிகளை அமைத்தவர் இவர். ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான கதையை ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, விஜயலலிதா நடிக்க வைத்து இவர் இயக்கிய “நில் கவனி காதலி” என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

பிரபல இயக்குநர் தாபி.சாணக்யா இயக்கத்தில் விஜயா-வாஹினி தயாரிப்பில் “வாணி ராணி” படம் 5 ரீல்கள் முடிவடைந்திருந்த போது அவர் திடீர் மரணமடைந்தபோது அப்படத்தினை இயக்கிக் கொடுத்தவர் இவர்.

கே.பாலாஜியின் மிகப் பெரிய வெற்றிப் படமான “ராஜா”, “நீதி”, “உனக்காக நான்”, “என் மகன்” போன்ற படங்களையும் இயக்கியவர். அதுபோல் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் “கலாட்டா கல்யாணம்”, “சுமதி என் சுந்தரி”, சிவாஜி, ஸ்ரீதேவி, பிரபு, ராதா நடித்த “சந்திப்பு”, ஆகிய படங்களை இயக்கினார். இம்மூன்றுமே வெற்றிப்படங்கள். மொத்தமாக 60 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நான்கு படங்கள் சம்பளமே வாங்காமல் இயக்கியவை. அதற்குக் காரணம் தாம் தொடர்ந்து  படங்களை இயக்கமுடியும் என்ற நம்பிக்கையினாலே என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் வெளிவந்த “சங்கிலி” என்ற திரைப்படத்தில் தான் இளைய திலகம் பிரபுவை அறிமுகம் செய்தார்.

1993-லிருந்து 4 வருடங்கள் நடிப்பதிலிருந்து விலகியிருந்த சிவாஜி கணேசனை தனது சொந்தப் படமான “ஒன்ஸ்மோர்” படத்தில் நடிக்க வைத்தார். இப்படத்தில் விஜய், சரோஜாதேவி, மணிவண்ணன், சிம்ரன் ஆகியோரும் நடித்திருந்தனர். இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

ஜெய்சங்கர், லக்ஷ்மி, நாகேஷ், ஆர்.முத்துராமன் நடித்த “வீட்டுக்கு வீடு” ஒரு நகைச்சுவைப் படம். இப்படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. எம்.ஜி.ஆருடன் பல படங்களில் இணைந்து நடித்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவை சிவாஜி புரடக்‌ஷன்ஸ் தயாரித்த “கலாட்டா கல்யாணம்” படத்தில்தான் முதன் முறையாக சிவாஜிகணேசனுடன் இணைந்து நடிக்க வைத்தார். அதனால் சிவாஜியை உயரத்தில் நிறுத்தி, கீழிருந்து பல படிகள் ஏறி அவரைச் சென்றடைவது போன்று ஒரு பாட்டு வைத்திருப்பார். அந்தப் பாட்டு தான் “நல்ல இடம் நீ வந்த இடம்” என்று ஆரம்பிக்கும். அதாவது இத்தனைப் படிகள் நீ ஏறி வந்திருந்தாலும் ‘நீ வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய்’ என்று சொல்லும் பாட்டு. இதை அந்தக் காலத்தில் ரசிகர்கள் புரிந்துகொண்டு ரசித்தார்கள். புதுமையான கதைகளை இயக்கிக் கொண்டிருந்தவர் இவர்.

இந்தியில் “ஆராதனா” என்ற பெயரில் வெளியாகி பாடல்களுக்காகவே பெரும் வெற்றி பெற்ற “ஆராதனா”வைத்தான் “சிவகாமியின் செல்வன்” என்ற பெயரில் இயக்கினார். இந்தியில் “ருப் தேரா மஸ்தானா” பாட்டில் ரசிகர்கள் மயங்கினார்கள் என்றால் தமிழில் ‘எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது” பாட்டில் கிறங்கிப் போனார்கள் ரசிகர்கள். இவரது 32 படங்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விசுவநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தொலைக்காட்சிகளில் பல தொடர்களையும் இயக்கியிருக்கின்றார். முதன் முதலாக நா.பார்த்தசாரதியின் “குறிஞ்சி மலர்”’ தொடரை இயக்கினார். இத்தொடரில் கதாநாயகனாக நடித்தவர் மு.க.ஸ்டாலின்.  இவர் இயக்கிய “கோகிலா எங்கே போகிறாள்” இன்ற தொடருக்கு சிறந்த இயக்குநர் விருது இவருக்குக் கிடைத்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது “கலைமாமணி’’ விருது கொடுத்து கௌரவித்தார்.

இவருக்கு ஜானகி என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் என்ற இரு வாரிசுகளும் உள்ளனர்.

’புதிய தீர்ப்பு’ 1985 படத்தில் விஜயகாந்த்,  அம்பிகாவுடன் சி.வி.ராஜேந்திரன்C.V.Rajendran-Puthiya Theerpu 1985-01C.V.Rajendran-Puthiya Theerpu 1985-C.V.Rajendran-Ambika-Vijayakanth -Puthiya Theerpu 1985-

10 comments on “C.V.Rajendran [Director / Producer]

 1. 1967ல் காதலிக்க நேரமில்லை படத்திற்கு இணை இயக்குநராகப் புரிந்தார்.தொடர்ந்து ஸ்ரீதருடன், கலைக்கோயில்,வெண்ணிற ஆடை,கொடிமலர்,நெஞ்சிருக்கும் வரை ஆகிய படங்களுக்கு துணை இயக்குநராகப் பணிபுரிந்தார்

  ஏ கே வேலன் மூலம் சித்ராலயா கோபுவின் அனுபவம் புதுமை கதை மூலம் 1967ல் இயக்குநர் ஆனார்

  இந்நிலையில், இந்திய-சீனா போர் மூளவே, அதற்கு நிதி திரட்ட நடிக, நடிகைகள் ஸ்ரீதர் எழுதிய கலாட்டா கல்யாணம் என்ற நாடகத்தை எழுதினார்.அது திரைப்படமான போது சிவாஜி சிபாரிசு செய்ய கலாட்டாகல்யாணம் படத்தை 1968ல் இயக்கினார்

  இப்படத்தில்தான் முதன்முறையாக ஜெயலலிதா சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.அதை வரவேற்கும் விதமாக கண்ணதாசன் “நல்ல இடம் நீ வந்த இடம்” என்ற பாடலை எழுதினார்..

  தொடர்ந்து இவரது இயக்கத்தில் வந்த படங்கள்

  1970ல் வீட்டுக்கு வீடு
  1971 புதியவாழ்க்கை
  71ல் சுமதி என் சுந்தரி
  72 கோமல் எழுதிய “நவாப் நாற்காலி’
  72ல் தேவானந்த் ஹிந்தியில் நடித்த ஜானி மேரா நாம் படம் தமிழில் ராஜா வாக வர அதை இயக்கினார்.வசூலில் சாதனை புரிந்த படமாக அமைந்தது
  தொடர்ந்து சிவாஜி நடிக்க, நீதி, பொன்னூஞ்சல்,என் மகன், சிவகாமியின் செல்வன்,வாணி ராணி ஆகிய படங்களை இயக்கினார்.

  பின் 1980 கமல் நடித்த உல்லாச பறவைகள் இவர் இயக்கம்.தொடர்ந்து, ரஜினி நடித்த கர்ஜனை
  வெளிவந்தது

  1982ல் தியாகி,1984ல் வாழ்க்கை..தொடர்ந்து
  பிரபு அறிமுக்மாக சங்கிலி 1982ல் வந்தது

  1989ல் சின்னப்பதாஸ் இவர் இயக்கத்தில் வந்த கடைசிப்படமாகும்

  ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை ஹிந்தியில் பூர்ணசந்திரா என்ற பெயரில் இவர் இயக்கத்தி வந்தது குறிப்பிடத்தக்கது/

 2. ‘கலாட்டா கல்யாணம்’ படத்தை சி.வி. ராஜேந்திரன்தான் இயக்க வேண்டுமென்று சிவாஜி உறுதியாக இருந்தார்.

  உடனே சி.வி. ராஜேந்திரன் சிவாஜியிடம் ‘இந்தப் படத்தில் ஏன் உங்களுக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்கக்கூடாது ?’ என்று கேட்டவுடன் சம்மதித்தார் சிவாஜி!

  இந்த படம்தான் சிவாஜி – ஜெயலலிதா ஜோடி சேர்ந்த முதல் படம்!

  அதற்கு முன்பு வந்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜியின் மகளாக நடித்திருந்தார் ஜெயலலிதா!

  இந்த படத்தில், டைட்டில் வருவதற்கு முன்பே படம் ஒரு பாடலோடுதான் துவங்கும். சி.வி. ராஜேந்திரனும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள். சி.வி. ராஜேந்திரன் பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவிற்கு உண்டு!

  அதனால் படத்தின் முதல் காட்சியே ஒரு நல்வரவு பலகையோடு கேமரா பின்னோக்கி வரும்!

  கேமராவை நோக்கி ஜெயலலிதா ஓடிவந்து சாத்தனூர் அணைக்கட்டின் மேல் படிக்கட்டில் இருக்கும் சிவாஜியை நோக்கி ஓடிப்போவார்!

  அவரை அப்படியே அணைத்து அவர் முதுகுக்குப்புறமாக கேமராவை பார்த்து ‘ வந்த இடம் நல்ல இடம்! வரவேண்டும் காதல் மகராணி’ என்று ஆரம்பித்தவுடன், அது ஜெயலலிதா தன்னுடன் ஜோடி சேர்ந்ததற்கான வரவேற்பு என்பதை புரிந்து கொண்டு ரசிகர்களின் விசில்கள் பறக்கும்.

  இந்த படத்தில் எல்லா பாடல்களையும் எழுதியிருந்தவர் வாலி!

  இந்த வருடம் வந்த முதல் படம் புராணம் என்றால், அடுத்த படம் முற்றிலுமாக மாறியிருந்த படம்தான் ‘கலாட்டா கல்யாணம்’!

 3. those days in 1960s/70s – dominated by MGR and Sivaji. Same time they both ensured no competitor or close to them. Only Valee, MSV and Kannadasan are closely worked with both leading stars.

 4. பிரபல திரைப்பட இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு அவருக்கு வயது 81.

  பிரபல திரைப்பட இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி.ராஜேந்திரன். ஸ்ரீதர் இயக்கிய படங்களில் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜேந்திரன், முத்துராமன் நடித்த ’அனுபவம் புதுமை’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். நில் கவனி காதலி, சுமதி என் சுந்தரி, ராஜா, நீதி, சிவகாமியின் செல்வன், உல்லாச பறவைகள், ஆனந்த், சின்னப்பதாஸ் உட்பட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களையும் இயக்கியுள்ளார். விஜய், சிவாஜி கணேசன் நடித்த ஒன்ஸ்மோர், பிரபு நடித்த வியட்நாம் காலனி ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில் மட்டும் 14 படங்களை இயக்கியுள்ளார் இவர்.

  சென்னை தி.நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சி.வி.ராஜேந்திரன் கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இந்நிலையில் இன்று காலை காலமானார்.

  மறைந்த சி.வி ராஜேந்திரனுக்கு ஜானகி என்ற மனைவியும் பத்மஜா என்ற மகள், ராஜீவ் என்ற மகன் உள்ளனர். பத்மஜாவும் ராஜீவ்வும் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் வந்த பின் இறுதி சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

  மறைந்த ராஜேந்திரன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

 5. சிவாஜியை இளமைக்குத் திருப்பியவர் சிவி ராஜேந்திரன்! – கவிஞர் வைரமுத்து

  Read more at: https://tamil.filmibeat.com/news/vairamuthu-s-condolence-cv-rajendiran-052889.html

  இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு கலை இழப்பு. இளமையும் அழகியலும் கொஞ்சிக் குலாவிய கலைஞன் சி.வி.ராஜேந்திரன். இயக்குநர் ஸ்ரீதருக்குத் தொழில்நுட்பக் கண்ணாகத் திகழ்ந்தவர். அறுபதுகளில் முதுமைத் தோற்றத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியை எழுபதுகளில் இளமைத் தோற்றத்திற்கு அழைத்து வந்த பெருமை அவரைச் சாரும். ராஜா, சுமதி என் சுந்தரி போன்ற படங்கள் இன்னும் கண்ணைச் சுற்றிச் சுற்றி வரும் வண்ணக் கனவுகளாகும்.

  அவரோடு நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பது என் நினைவுகளின் கருவூலமாகும். ஒரு குளிர்ந்த சந்திப்பில் ‘வாரம் ஒருமுறையாவது உங்களை நினைத்துக்கொள்கிறேன்’ என்றேன் நான். ‘நித்தம் ஒரு முறையாவது உங்களை நினைத்துக்கொள்கிறேன்’ என்றார் அவர். கலையும் பண்பாடும் கலந்து நின்ற இயக்குநர் அவர். ஒரு குறிப்பிட்ட கால வெளியைச் சிறகடிக்கும் உற்சாகத்தோடு வைத்திருந்ததில் சி.வி.ஆருக்குப் பெரும் பங்குண்டு. கலையுலகத்தில் ஒரு மூத்த தலைமுறை கழிந்துகொண்டேயிருப்பது கவலை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் கலையுலகத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். – கவிஞர் வைரமுத்து

  Read more at: https://tamil.filmibeat.com/news/vairamuthu-s-condolence-cv-rajendiran-052889.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s