Gangai Amaran [ Actor, Director, Producer, Screenwriter, Film score composer, lyricist, music director, songwriter, singer, conductor, instrumentalist ]

கங்கை அமரன் [இசையமைப்பாளர்]

இளையராஜாவின் இளைய சகோதரர் அமர்சிங். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி இசை, பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர்.


இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் “பத்ரகாளி” உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக.
அமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம். 

பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் “புதிய வார்ப்புகள்” படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது.
இளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை “செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே” என்று அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன்.

“கோழி எப்படிய்யா கூவும்” என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த “கோழி கூவுது” படத் தலைப்பைக் கேட்டு விட்டு. “உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது?” என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது. 1983-இல் கொக்கரக்கோ, 1984-இல் பொழுது விடிஞ்சாச்சு, தேவி ஸ்ரீதேவி, வெள்ளைப் புறா ஒன்று, 1987-இல் சக்கரைப்பந்தல், 1988-இல் எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கோயில் மணி ஓசை, 1989-இல் கரகாட்டக்காரன், அண்ணனுக்கு ஜே, 1990-இல் ஊரு விட்டு ஊரு வந்து, 1991-இல் கும்பக்கரை தங்கையா, 1992-இல் வில்லுப்பாட்டுக்காரன், சின்னவர், பொண்ணுக்கேத்த புருஷன், 1993-இல் கோயில் காளை, 1994-இல் அத்த மக ரத்தினமே, 1997-இல் தெம்மாங்கு பாட்டுக்காரன் போன்ற படங்களை இயக்கினார்.

53-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் “இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பார்” சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். கே.பாலாஜியின் தயாரிப்பில் வாழ்வே மாயம், சட்டம், நீதிபதி படங்களுக்கு இசையமைத்தார். இப்படங்களின் பாடல்களனைத்துமே மிகவும் பிரபலமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து அவரின் ஒரு சில பாடல்களைத் தாங்கி வரும் இசைத் தொகுப்பு.

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த எம்.ஏ.காஜா இயக்கத்தில் வெளிவந்த “ஒரு விடுகதை ஒரு தொடர்கதை”. அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று “விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் “நாயகன் அவன் ஒரு புறம்”. 
சம காலத்தில் வந்த இன்னொரு படம் “மலர்களே மலருங்கள்”. இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான், இன்னொன்று ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் ‘இசைக்கவோ நம் கல்யாண ராகம்’
” இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு பிசியா இருந்த காலத்தில் நமக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு செய்து அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்” இப்படிச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன. சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் வரும் “காதல் வைபோகமே”.  மெளன கீதங்கள் படத்தில் இருந்து ” மூக்குத்திப் பூ மேலே காத்து உக்காந்து பேசுதய்யா”

1990 களில் ஓர் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா?. “இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவேண்டியதாப் போச்சு பாருங்க” என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் “நீலவான ஓடையில்” பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப்பிடிக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். மலையாளத்தில் “நீலவானச் சோலையில்” என்று பாடிச் சென்றவர் கே.ஜே.ஜேசுதாஸ்.”வாழ்வே மாயம்” கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து.
அதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. “பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்” என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் “அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா”. அப்போது தான் வெளி வந்த படமான “அத்த மக ரத்தினமே” படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல்.
“ஜீவா” என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு “சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு”.

1947-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் நாளன்று தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பிறந்த கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் என்ற இரு மகன்கள்.

http://www.radiospathy.com/2009/11/blog-post_12.html  வலைத்தளத்திலிருந்தும் விக்கிப்பீடியாவிலிருந்தும் விவரங்கள் திரட்டப்பட்டது.

பயணங்கள் முடிவதில்லை 1982 படத்தில் கங்கை அமரன்

பயணங்கள் முடிவதில்லை 1982 படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராமனுடன் கங்கை அமரன்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s