S.S.Vedha [Music Composer]

எஸ்.எஸ்.வேதா [இசையமைப்பாளர்]

இவரது இயற்பெயர் எஸ்.எஸ்.வேதாச்சலம். இலங்கையைச் சேர்ந்தவர். இவருக்கு ‘திகில் மன்னன்’ என்ற பட்டமும் ரசிகர்களால் வழங்கப்பட்டிருந்தது. 1950- ஆரம்ப காலங்களில் சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இவரது இசையமைப்பில் முதன்முதலாக வெளிவந்த தமிழ்ப் படம் நடிகர் ஸ்ரீராம் தயாரித்த ‘மர்ம வீரன்’. இப்படம் 1956-இல் வெளிவந்தது. ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர்.

’மர்ம வீரனில்’ 10 பாடல்கள். வழக்கமாக தாலாட்டுப் பாடல்களைப் பாடிவந்த பாலசரஸ்வதி தேவியை சிருங்கார ரசம் ததும்பும் ஒரு பாடலைப் பாட வைத்தார் வேதா. அந்தப் பாடல் தான் ‘துடிக்கும் வாலிபமே நொடிக்குள் போய்விடுமே’. இந்தப் பாடலை மிக அற்புதமாக பாடினார் பாலசரஸ்வதி தேவி. 1958-ஆம் ஆண்டு இரண்டு படங்கள். 1-’மணமாலை’ , ‘அன்பு எங்கே’. ‘மணமாலை’ படத்தில் இணைந்து நடித்தவர்கள் ஜெமினி கணேசன், சாவித்திரி. இவர்களுக்குப் பின்னணி பாடியவர்கள் ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா. அன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான ‘நடக்காது ஜம்பம் பலிக்காது, என்னைத் தொடவே உன்னாலே முடியாது’ என்ற பாடல். ராகங்களை மெல்லிசையாக வழங்குவதில் விற்பன்னராக விளங்கியவர் வேதா.

‘அன்பு எங்கே’ படத்திற்காக ’பைலா’ பாணியில் ஒரு பாடலை உருவாக்கினார் வேதா. சிங்களப் படங்களுக்கு இசையமைத்து வாழ்க்கையை ஆரம்பித்த வேதா இலங்கையின் பைலா பாணியில் அனைவரையுமே எழுந்து ஆடவைக்கும் விதத்தில் இசையமைத்ததில் ஆச்சரியமில்லை. சிரிக்க வைத்த பாட்டு ஆனால் அனைவரையும் சிந்திக்க வைத்தது. ரி.எம்.சௌந்தரராஜனின் இனிய குரலில் உருவான அந்தப் பாடல்தான் ‘டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கைப் பாரு தங்கம தில்லாலே’.

1959-இல் ‘மின்னல் வீரன்’, 1960-இல் ‘பார்த்திபன் கனவு’, கல்கி அவர்கள் 1941-இல் எழுதிய காவியத்திற்கு மேலும் உயிர் கொடுத்தன வேதாவின் இசைக் கோலங்கள். அத்தனைப் பாடல்களுமே பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். அதிலொன்று  ’இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்’. 1963-இல் ‘கொஞ்சும் குமரி’ , ‘பெண் மனம்’, 1964-இல் ‘பாசமும் நேசமும்’, ‘சித்திராங்கி’, ‘வீராங்கனை’, ’அம்மா எங்கே’ ஆகிய நான்குப் படங்களுக்கு இசையமைத்தார் வேதா. ‘ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே’ என்ற பாடல் கே.ஜே.யேசுதாஸ், பி.வசந்தாவுடன் இணைந்து பாடிய பாடல். ‘வீராங்கனை’யில் கே.ஜே.யேசுதாஸ்க்கு 3 பாடல்கள் கொடுத்தார். அவற்றில் ஒரு தத்துவப் பாடல். அந்தப் பாடல் ‘இடி இடிக்குது காற்றடிக்குது’. வசனகர்த்தா மா.ரா.வின் கவி வரிகளில் உருவான பாடல்.

1965-இல் ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘சரஸா பி.ஏ.’ என்ற இரண்டு படங்களுக்கு இசையமைத்தார் வேதா. ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் ஒரு பாடல் இந்தியிலிருந்து எடுக்கப்பட்டாலும் கவியரசு கண்ணதாசனின் அற்புதமான வரிகள் இசையோடு கலந்தபோது தமிழ் மணம்தான் வீசியது. அனைவருக்கும் பிடித்தமான அந்தப் பாடல் ஏக்கத்தின் தாக்கத்தை நம் மனங்களில் பதிய வைத்தது. அந்தப் பாடல் ’ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்’.

1966-ஆம் ஆண்டு ’இரு வல்லவர்கள்’, ‘வல்லவன் ஒருவன்’, ‘யார் நீ’ என்ற 3 படங்கள். ‘வல்லவன் ஒருவன்’ படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பிரம்மாண்டமான குரலுக்குப் பொருத்தமான வகையில் ஒரு பாடல் அமைந்தது. அந்தப் பாடல்தான் ‘பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா’ கவியரசரின் அற்புதமான படைப்பாற்றல், பிரபஞ்சத்தின் படைப்பாற்றலுக்குச் சவாலாக அமைந்தது. வேதாயின் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும் இணைந்து கேட்பவர்கள் மனதைக் கோபுரத்தின் உச்சிக்கே கொண்டு போனது.

1967-இல் மூன்று படங்கள். ‘எதிரிகள் ஜாக்கிரதை’, ‘அதே கண்கள்’, ’காதலித்தால் போதுமா’ ஆகிய படங்கள் வேதாவின் இசையில் வெளியாகின. ‘எதிரிகள் ஜாக்கிரதை’ படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய ‘நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்’ இந்தப் பாடல், ‘இரு வல்லவர்கள்’ படத்தில் ’நான் மலரோது தனியாக ஏனங்கு நின்றேன்’, ’அதே கண்களில்’ வா அருகில் வா தா உயிரைத் தா’ போன்ற பாடல்கள் வேதாவின் இசைத் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டின.

1969-இல் ‘மனசாட்சி’, ’நான்கு கில்லாடிகள்’, ‘உலகம் இவ்வளவுதான்’,‘பொண்ணு மாப்பிள்ளே’ என்ற படங்களில் அத்தனை பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘மனசாட்சி’ படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா பாடிய பெரும் ஹிட்டான பாடல் ‘ஏழு ஸ்வரங்கள் ஒரு ராகம்’ இதே படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன் நாகேஷ் அவர்களுக்காக பாடிய நகைச்சுவையுடன் கூடிய ஒரு தத்துவப் பாடல் ‘லவ் பண்ணுங்க சார் நான் வேணாங்கல்லே அது லைஃப் பிரச்சனை சார் அது விளையாட்டில்லே’ என்ற பாடல். இந்தப் பாடல் மிக பிரபலமடைந்த பாடல். ஆனால் இன்றோ இப்படம் இணையதளங்களில் காணப்பட்டாலும் ரசனை கெட்டவர்களால் அப்பாடல் கத்தரிக்கப்பட்டுவிட்டது. நாகேஷை முக்கிய கதாபாத்திரமாக்கி எடுக்கப்பட்ட படம் தான் ‘உலகம் இவ்வளவுதான்’. இப்படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன் நகைச்சுவை நடிகர் சோவுக்காக பாடிய பாடல்தான் ‘ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு, இந்த ஒலகம் சுழலுதடி பல ரவுண்டு’ என்ற பாடல். இது அந்த நாட்களில் ஒலிக்காத இடங்களே இல்லையெனலாம். இதே படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடிய மற்றுமொரு பாடல் இவ்வளவு தான் உலகம் இவ்வளவுதான், இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்’ அனைவரையும் கவர்ந்த ஒரு பாடலாக அமைந்தது. பி.எஸ்.வீரப்பாவின் ‘பொண்ணு மாப்பிள்ளே’ படத்தில் ஏ.எல்.ராகவன், சதன் இணைந்து பாடிய ‘மணமகன் அழகனே மணமகள் அழகியே’ என்ற பாடல் மிகப் பிரபலமான பாடல்.

 1970-இல் ஒரு படம் ‘சி.ஐ.டி.சங்கர்’. 1971-இல் ஒரு படம் ‘ஜஸ்ரிஸ் விஸ்வநாதன்’. அதன்பின்னர் வாய்ப்புக்கள் அமையவில்லை. கர்நாடகம் இந்துஸ்தான், பொப்பிசை, மெல்லிசை என்று எந்த பாணியிலும் இசையமைக்கும் திறமை கொண்டவர் வேதா. சினிமா உலகம் கற்பனைக்கு முதலிடம் தரும் இடமல்ல. அங்கு விற்பனைக்குத் தான் முதலிடம். திரையிசையில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும், பழைய பாடல்கள் தரும் சுகம் புதியவைகளில் இல்லை.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை வானொலியில் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. விசாலாக்ஷி ஹமீது அவர்கள் வழங்கிய ‘இன்னிசைச் சுவடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

vedha

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s